திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நேற்று(ஜூன் 22) சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் மணிப்பூர் கலவரத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மனங்களின் விவரங்களை திருமாவளவன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இன்று(ஜூன் 22) வெளியிட்டுள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் இந்நிலைபாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.
அத்துடன், இனிமேல் புதிய மதுக்கடைகள் ஏதும் திறக்கப்படாது என்பதையும் அறிவிக்க வேண்டுமென்றும்; தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிற கடைகள் யாவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் படிப்படியாக முழுமையாக மூடப்படும் என அறிவிக்க வேண்டுமென்றும் எமது உயர்நிலைக்குழு தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.
1954 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் நாள் இந்திய அரசின் திட்டக்குழு சார்பில் ‘மதுவிலக்கு விசாரணைக் குழு’ என்னும் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அக்குழு “ மதுவிலக்கை அறிவிக்க மாநில அரசுகள், தெளிவான ஒரு கால வரையறையை அறிவிக்க வேண்டும். அதிலிருந்து மதுவிலக்குக் கொள்கையைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் நடத்தை விதிமுறைகளில் மது அருந்துவதில்லை என்பது கட்டாயம் இடம்பெறச் செய்ய வேண்டும்; பாதுகாப்புப் படை, காவல்துறை ஆகியவற்றில் மதுவிலக்கு முழுமையாக ஏற்கப்பட வேண்டும்” என்பவை உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசிடம் அளித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள 43,283 கோயில்கள் அனைத்திலும் அறங்காவலர் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.
தற்போது 780 கோயில்களில் மட்டும்தான் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்து சமய அறநிலையத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பேடு தெரிவிக்கிறது.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்துத் திருக்கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைக்கும்போது சட்டப்படி ஆதி திராவிடர் ஒருவரும், பெண் ஒருவரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். அதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யவேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கையொன்றைக் கேட்டுப்பெற வேண்டும். அந்த அறிக்கையைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவேண்டும்.
இந்து சமய அறநிலையச் சட்டம் 1959, பிரிவு 106 இல் ”எவ்விதப் பாகுபாடுமின்றி பிரசாதம், தீர்த்தம் வழங்கவேண்டும்” என உள்ளது.
அதற்கு முரணாக செயல்படும் பூசாரிகள் எவராயிருந்தாலும் அவர்களை பூசாரிப் பொறுப்பிலிருந்து நீக்குவதோடு அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்துகொண்டுள்ள சுமார் நான்காயிரம் கோயில்களும் பொதுக் கோயில்களாக உள்ளனவா? என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறைக்குக் கீழுள்ள கோயில்கள் அனைத்திலும் அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் அறிவிப்புப் பலகையொன்று பொருத்தப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் தற்போது நடைமுறையில் உள்ள மண்டகப்படி / உபயதாரர் பட்டியலில் பட்டியல் சமூகத்தினருக்கும் இடம் அளிக்கவேண்டும். பல இடங்களில் காவல்துறையினருக்கு உபயம் உள்ளது. அது காவல்துறையின் சமயச் சார்பற்ற நிலைக்கு எதிரானதாக உள்ளது.
எனவே காவல்துறை உபயதாரராக இருப்பதிலிருந்து வெளியேற்றுவதற்குரிய ஆணையை தமிழ்நாடு அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் சுமார் 2 மாதங்களாக நடைபெற்றுவரும் வன்முறைவெறியாட்டத்தில் 100 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சரின் வீடும்கூட எரிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை வெறியாட்டத்துக்கு பாஜகவின் பெரும்பான்மை மதவாத அணுகுமுறையும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலும்தான் காரணம். இந்த வன்முறை வெறியாட்டத்துக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலகவேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு!
”ஆளுநரின் கருத்துகள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை”-அமைச்சர் தங்கம் தென்னரசு
அது உங்கள் சொந்த இடத்துல எசமான்..🏆
😡