ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இன்றி ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கிளை வங்கிகளுக்கு எஸ்.பி.ஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
2,000 ரூபாய் நோட்டினை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்வதாக ஆர்.பி.ஐ அறிவித்தது. வரும் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம், அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம் என்று அறிவித்தது.
இந்நிலையில் இந்த நோட்டுகளை மாற்றவோ, டெபாசிட் செய்வதற்கோ வரும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் முரளிதரன் கிளை வங்கிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “பொதுமக்கள் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள எந்த கோரிக்கை சீட்டும் தேவையில்லை. பரிவர்த்தனையின் போது எந்த அடையாளச் சான்றும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. பொது மக்களுக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி எந்த தடையும் சிரமும் இன்றி ஒத்துழைப்பு வழங்குங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 திரும்பப் பெறப்பட்டது குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மேன் தினேஷ் குமார் காரா கூறுகையில், “இந்த நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதால் பொருளாதாரத்தில் அதிக தாக்கம் ஏற்படாது. பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் யுபிஐ பரிவர்த்தனை கிட்டத்தட்ட 50-51 சதவிகிதம் பங்களிக்கிறது.
ஆரம்பத்தில், 2000 ரூபாய் நோட்டு மொத்த புழக்கம் கிட்டத்தட்ட 50 சதவீத அளவுக்கு இருந்தது. அது தற்போது 10.8 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்த இடைவெளியை யுபிஐ நிரப்பியுள்ளதால் அந்த அளவுக்கு பாதிப்பு இருக்காது” என்று கூறியுள்ளார்.
பிரியா