ஆளுநர் ‘with hold’ என்று குறிப்பிட்டு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு அர்த்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிராகரிக்கப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 18) காலை கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் திருப்பிய அனுப்பிய 10 மசோதாக்கள் மீது முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இந்த தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் அரசினுடைய தனித் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார். அதில் எதிர்க்கட்சி என்ற முறையில் எங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். ஆளுநரால் 10 சட்ட முன் வடிவுகள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அது சட்டமன்றத்தில் மீண்டும் முன்மொழியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று தனி தீர்மானத்தில் தெரிவித்திருக்கிறார்.
அதில், ‘with hold’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றார். நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது என்றால் அது தொடர்ந்து இருப்பதாக தான் நான் கருதுகிறேன். ஏனென்று சொன்னால் மசோதாக்கள், ரத்து செய்யப்பட்டதாகவோ, நிராகரிக்கப்பட்டதாகவோ தெரிவிக்கப்பட வில்லை.
ஆகவே ஏற்கனவே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநரிடம் நிலுவையில் இருப்பதாக தான் கருதுகிறேன். இதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதையும் அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அது நிலுவையில் இருப்பதாக அர்த்தமில்லை. திருப்பி அனுப்பப்பட்டு விட்டது. ஆளுநர் இந்த சட்ட முன்வடிவுகளை திருப்பி அனுப்பவில்லை. மாறாக அவர் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்துள்ளார் என்று இன்றைக்கு பல ஊடகங்கள் சொல்வது போல எதிர்க்கட்சி தலைவரும் சொல்கிறார்.
சட்டமன்றம் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்தாலும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 200-ன் படி அவர் ஒப்புதல் வழங்க கட்டுப்பட்டவர் அல்ல என்ற தவறான கருத்துக்களை யாரோ திணித்து கொண்டிருக்கிறார்கள். யாரோ ஒரு சட்ட மேதாவி அளித்த ஆலோசனையின் படி, கெட்டிக்காரத்தனமாக செயல்படுவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு குறிப்புரையை அவர் எழுதியுள்ளார் என்று நினைக்கின்றேன்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன், “மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை என்றால் அது மறுக்கப்பட்டது என்று தான் அர்த்தம் என்றார் ஆளுநர். ஆனால் நீங்கள் நினைக்கிறீர்கள் அங்கு ஆளுநரிடம் உயிரோடு தான் இருக்கின்றது என்று. ஆனால் அவர் என்ன சொல்கிறார், பதிலளிக்கவில்லை என்றால் அது இறந்துவிட்டதாக அர்த்தம் என்று. அதனால் மசோதாக்கள் உயிரோடு இருக்கிறதா அல்ல, இறந்து விட்டதா என்பதை கண்டுபிடிக்கும் வேலையையும் பார்க்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, “இந்த ‘with held’, ‘with hold’ என்பது மறுக்கப்பட்டது என்று தான் அர்த்தம். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, அவர்களிடம் வரும் மசோதாக்களை நிராகரிக்கிறோம் என்று சொல்வதில்லை. ஆனால் அதன் பொருள் படும் படியான விதத்தில் with held என்று சொல்கிறார் என்றால் நிராகரிக்கிறார் என்று தான் அர்த்தம்.
ஏற்கனவே நீட் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட போது, குடியரசுத் தலைவர் with held என்று அனுப்பப்பட்டது. இதே அவையில் அதன் மீது முடிவெடுக்கவில்லை என்று தான் சொன்னோம். ஆனால், நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல்களே, ’with held’ என்றால் குடியரசுத் தலைவர் அதனை நிராகரித்து விட்டார் என்று தான் பொருள் என்று தெரிவித்துள்ளார்கள்.
எனவே இந்த இடத்திலும் ஆளுநர் with hold என்ற சொல்கிறார் என்றால் அதனை நிராகரிப்பதாகவே பொருள்படும்” என்று விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து இது தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் with hold என்று போட்டிருக்கிறார். அப்படி என்றால் மீண்டும் சட்டமன்றத்தில் விவாதிப்பதற்கோ, மறு ஆய்வு செய்வதற்கோ உரிமை இருக்கிறதா என்ற கோணத்தில் தான் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருக்கிறார். அவருடைய கேள்வி நியாயமானது. அதில் தவறு ஏதுமில்லை.
ஆனால் நீட் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் with held என்று திருப்பி அனுப்பிய போது அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ஏன் அப்படி அனுப்பினீர்கள் என்று மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். விளக்கம் அளித்திருந்தால் அந்த மசோதா மீது மறு ஆய்வு கொண்டு வந்திருப்போம் என்று சொன்னார். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் 2019, ஜூலை 17 ஆம் தேதி தெளிவாக சொல்லிருந்தார். with hold என்று சொன்னால் அரசியலமைப்பு சட்டம் 201-ன் கீழ் மறு ஆய்வு செய்வதற்கு இந்த சட்டமன்றத்திற்கு உரிமை இருக்கிறது.
மக்கள் பிரச்சனையை எத்தனை முறை வேண்டுமானாலும் சட்டமன்றத்தில் கொண்டு வரலாம். அது அவை குறிப்பிலும் இருக்கிறது.
மேலும் with hold என்று குறிப்பிட்டிருந்தால் மறு ஆய்விற்கு உட்பட்டது அல்லது மறு ஆய்வு செய்யக்கூடாது என்று எந்த சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை. இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலோ, பேரவை விதிகளிலோ குறிப்பிட்டு சொல்லப்படாத பொருள் குறித்து சட்டமன்றத்தில் இவ்வாறு ஒரு தனித்தீர்மானம் கொண்டு வந்தால், அந்த இடத்தில் இந்த பேரவை எனக்கு தந்திருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மறு ஆய்விற்கு சபாநாயகர் என்ற முறையில் நான் அனுமதி அளித்து தான் இதுவரை இந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே அது மறு ஆய்விற்கு உட்பட்டது தான்.
எனவே 10 மசோதாக்களும், ஒரு முற்றுப்புள்ளி கூட மாறாமல் நீட் மசோதா, ஆன்லைன் ரம்மி மசோதா எப்படி திருப்பி அனுப்பப்பட்டதோ, அதே போல் திருப்பி அனுப்பப்படும். ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். இது தான் சட்டம்” என்று தெரிவித்தார் சபாநாயகர் அப்பாவு.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
வேந்தர் நியமன தீர்மானம்: பாஜக எம்.எல்.ஏ எதிர்ப்பு… முதல்வர் பதில்!
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியது இவர் தான்!