மது விற்பனையை ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பரிந்துரை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழகத்தில் முழு மது விலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பாமக நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர்,
முதன்முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது தான் அதன் பொருள். எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா : கேழ்வரகு குக்கீஸ்