Will you participate on the same stage with Vijay?: Thirumavalavan reply!

ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்பா? : திருமா பதில்!

அரசியல்

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரே மேடையில் விஜய்யுடன் பங்கேற்பது குறித்து திருமாவளவன் இன்று (நவம்பர் 5) விளக்கம் அளித்துள்ளார்.

வரும் டிசம்பர் 6ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கர் 68வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினத்தில் அம்பேத்கர் குறித்த கட்டுரை தொகுப்பு புத்தகத்தை தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொள்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்களே உள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன், திமுகவை எதிர்த்து அரசியலில் புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் அமர்வது திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என பேச்சு எழுந்தது. இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில், “ஒரே மேடையில் திருமா – விஜய்யா? சூடு பிடிக்கும் அரசியல் களம்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

ஓராண்டு முன்பே முடிவு செய்யப்பட்டது!

அதற்கு அவர், ”டிசம்பர் 6 புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பது என்பது ஓராண்டுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் அந்த புத்தகத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

விகடன் பதிப்பகமும், ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமென் நிறுவனமும் இணைந்து இந்த புத்தகத்தை கொண்டு வருகிறார்கள்.

சுமார் 40 பேர் அம்பேத்கர் குறித்து எழுதிய கட்டுரை தொகுப்பு தான் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற அந்த புத்தகம்.

ஏப்ரல் 14 அன்று நடைபெறுவதாக இருந்திருந்தால், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவதாகவும், ராகுல்காந்தி, பத்திரிகையாளர் தி இந்து ராம், அம்பேத்கர் உறவினர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சொல்லியிருந்தார்கள்.

தவெக மாநாடு நடைபெறுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பாக விஜய்யும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கலாம் என தெரிவித்தனர். ரஜினிகாந்த் கூட பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறியிருந்தார்கள்.

இப்படி தான் எங்களுக்கு சொல்லப்பட்டது. அதன்படி நாங்களும் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தோம்.

இப்போது விஜய் அதில் பங்கேற்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு செய்வோம்” என்று தெரிவித்தார்.

மேடையைப் பகிர்வது கூட்டணியைக் குறிக்காது!

முன்னதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியிலும் இதனை உறுதி செய்திருந்தார்.

அவர், “ஓராண்டுக்கு முன் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பிரதியை பெற்றுக் கொள்ள சம்மதித்திருந்தேன்.  அதற்கு பதிலாக விஜய் கலந்துகொள்ளலாம் என்று சமீபத்தில் அறிந்தேன். புத்தக வெளியீட்டில் ஒரு கட்சித் தலைவருடன் மேடையைப் பகிர்வது கூட்டணியைக் குறிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தேர்தல் கூட்டணி, 2016 சட்டமன்ற தேர்தல் களம் குறித்த பல்வேறு விஷயங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

கடந்த 25 வருடங்களில் விசிக அரசியல் ரீதியாக எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்களா?

எங்களின் வளர்ச்சி எங்களின் வாக்குகளுடன் ஒத்துப் போகவில்லை என்றாலும், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அங்கீகாரம் பெற்றுள்ளோம். 10 ஆண்டுகளாக, தேர்தல் அரசியலைக் காட்டிலும், சாதி ஆதிக்கம் மற்றும் சுரண்டலுக்கு எதிரான சமூக-கலாச்சார இயக்கத்தில் கவனம் செலுத்தினோம். நாங்கள் ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறோம். 2011ல் தான் திமுகவுடன் கூட்டணி வைத்து 10 இடங்களில் போட்டியிட்டோம். இப்போது, ​​எங்களிடம் இரண்டு எம்.பி.க்கள் உள்ளனர் மற்றும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ஆனால் திருப்தி இல்லை.

புதிய போட்டியாளரான விஜய் தலித் வாக்கு வங்கியில் பங்கு பெற போராடுகிறாரே?

அரசியல் களத்தில் புதிய போட்டியளாரான விஜய் வேகமாக ஓடலாம், ஆனால் நாங்கள் வெகுதூரம் கடந்துவிட்டோம். அவர் ஒரு பிரச்சினையை முன்வைக்க மாட்டார் அல்லது ஒரு போட்டியாளராக இருக்க மாட்டார். எங்கள் வேர்கள் சமூக மற்றும் கலாச்சார பகுதிகளுக்கு பரவியது. தேர்தல் அரசியல் மட்டுமே எங்கள் பிரதான நிகழ்ச்சி நிரல் அல்ல.

ஆதவ் அர்ஜுனாவின் ’ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ குறித்து…

விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அதிகாரப் பகிர்வு குறித்து பேசியது ஒன்றும் புதிய முழக்கம் அல்ல. 1999  மக்களவைத் தேர்தலின் போது, ​​தேர்தல் அரசியலுக்கு வந்தோம். எங்களின் கோரிக்கை, ’கடைசி மனிதனுக்கு ஜனநாயகம் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகாரம்’ மற்றும் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’  என்பது தான்.

அதிகாரத்தை நம்மால் கைப்பற்ற முடியாது, பகிர்ந்து கொள்ளத்தான் முடியும். அரசியல் சக்தியாக மாறும் வரை, அதிகாரத்தில் ஒரு பங்கைக் கூட கோர முடியாது. கூட்டணியில் வாக்குகளை மாற்ற உதவினால்தான் நான் அரசியல் சக்தியாக பார்க்கப்படுவேன்.

2026 தேர்தலில் அதிக இடங்களைக் கோருவீர்களா?

தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது, ஆனால் தமிழகம் முழுவதும் எங்களது வாக்கு வங்கியை நாங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. நாங்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே போட்டியிடுவதால், 2% வாக்குகளைப் பெற்றுள்ளோம். அதிகாரப் பகிர்வை எப்படிக் கோருவது? வட தமிழகத்தில் உள்ள 70 தொகுதிகளில் எனக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 பேருக்கு எனது வாக்குகளை கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மாற்றுகிறேன். அதிக இடங்களில் போட்டியிட்டால்தான் எனது வாக்கு சதவீதம் அதிகரிக்கும்.

உங்கள் கூட்டணி தலைவர் உதவ மாட்டாரா?

கூட்டணி தலைமை பலவீனமடையும் போது அல்லது எதிர்கட்சிகளின் வாக்குகள் அதிகரித்தால் மட்டுமே அப்படி நடக்கும். தமிழகத்தில் இதுவரை அப்படி ஒரு நிலை வரவில்லை.

அதிமுக பக்கம் மாறினால்?

அதிமுகவுடன் சென்றால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது நிரூபிக்கப்படாத விஜய்யின் தவெக போன்று தான். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் நாங்கள் இருக்கிறோம். அதில் இருந்து வெளியே வர எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை. மேலும் திமுக – காங்கிரஸ் தலைமையிலான இந்திய கூட்டணி நிறுவனர் உறுப்பினர்களில் நானும் ஒருவன்.

விக்கிரவாண்டியில் உங்கள் மதுவிலக்கு மாநாடு மற்றும் விஜய்யின் மாநில அளவிலான முதல் மாநாடு கூட்டத்தின் வெற்றியை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஒரு சினிமா ஆளுமையால் பெரிய மாற்றங்களைச் செய்ய முடியாது. அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருந்த எம்ஜிஆர் காலம் வேறு. இன்று, ஆட்சி அமைக்க புகழ் போதாது. ஒரு கட்சிக்கு 35% வாக்குகள் தேவை, அதை உடனடியாக அடைவது கடினம்.

எம்ஜிஆர் கூட 15 ஆண்டுகள் எடுத்தார். விஜயகாந்த் தனது ஆரம்பத் தேர்தலுக்குப் பிறகு போராடினார். எம்ஜிஆர் வாக்கு மூலம் ஜெயலலிதா முதல்வரானார். அவர் ஒரு கட்சியை உருவாக்கவில்லை. ஒரு தலைவராக உருவாகவில்லை. ஏற்கெனவே கட்சி நிறுவப்பட்டு வலுவாக இருந்தது. பின்னர் அவர் தன்னைத் தகுதியான தலைவராக நிலைநிறுத்திக் கொண்டார், அதனால்தான் அவரால் நிலைநிறுத்த முடிந்தது.

வட தமிழ்நாட்டை மையமாக வைத்து விஜய் மாநாடு நடத்தியிருக்கலாம். ஆனால் எந்த பாதிப்பும் இருக்காது. எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுக, அதிமுக, இடதுசாரி கட்சிகளின் உறுதியான வாக்காளர்களை அவர்களால் கவர முடியாது.

வாரிசு அரசியல் மற்றும் ஊழல் குறித்து விஜய் கூறியதை பழைய முழக்கங்கள் என்கிறீர்களே?

சினிமாவிலும் வாரிசு அதிகம். நடிகர் விஜய்யும் சினிமாவில் சொந்தமாக வரவில்லை. அவரது தந்தை ஒரு இயக்குனர். கடந்த 50 ஆண்டுகளாக வாரிசு அரசியல் மற்றும் ஊழல் பற்றி திரும்பத் திரும்ப பேசுகிறார்கள். ஆனால் மக்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்துள்ளார்கள் என்பதே நிஜம்

திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் சண்டை நடக்கிறது. உங்கள் பார்வை?

ஒரு தாயிடமிருந்து வந்த குழந்தை போன்று தான் திராவிடக் கருத்தியலில் இருந்து தமிழ் தேசியம் உருவானது. ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழலாம் ஆனால் தாயும் குழந்தையும் ஒரே மாதிரியானவர்கள்.

திமுக – பாஜக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக அதிமுகவினர் கூறுகிறார்களே

அரசியலுக்காக சொல்கிறார்கள். முடிந்தால் அவர்கள் நிரூபிக்கட்டும்” என்று திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!

30 கோடி இல்லனா மார்க்கெட் வேல்யூ… ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறிய பின்னணி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *