மோடியை கேட்பீர்களா ஆளுநரே?: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டு கல்வி மற்றும் முதலீடு குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

உதகையில் நேற்று நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “வெளிநாட்டுக்கு செல்வதாலோ, தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. உலகளாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், கடந்த மே 23-30 வரை சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தசூழலில் ஆளுநர் இவ்வாறு கூறியதற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி ராஜா மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,

“நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் மற்றும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு.
இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலம். உலகின் முன்னணி தொழில் நிறுவனங்கள் பல தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அமைத்துள்ளன.

Hyundai , Renault Nissan, Mitsubishi, Pou Chen உள்ளிட்ட நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளன. இந்தியாவில் தொழில்துறையில் பணிபுரியும் பெண்களில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
ஆளுநர் தனது தரவை சரியான முறையில் விளக்குவது நல்லது.

உலகில் வளரும் மற்றும் வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடும் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க முயற்சிக்கிறது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நிதி அமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் முதலீட்டாளர்களுடன் பேசுவதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் சென்று வருகின்றனர். பிரதமர் மோடியும் முதல்வராக இருந்த போது முதலீட்டை ஈர்க்கச் சென்றுள்ளார்.

ஆளுநர் பல தசாப்தங்களாக தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தி வரும் விஷயங்களைச் சொல்லி நேரத்தைச் செலவழிப்பதை விட, தமிழ்நாடு பிராண்டின் தூதராக இருந்து நமது வெற்றிகளை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்”

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

“தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி ஒரு சுவாரஸ்யமானவராக மாறியிருக்கிறார். மோடி வந்த பிறகுதான் நாட்டில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று ஆளுநர் கூறுகிறார்.

ஆனால் நரசிம்மராவ், மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் காலத்தில் தான் நாட்டில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டது. இப்போது தொழில் வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

மாநிலங்கள் பிரிக்கப்பட்டது நிர்வாக காரணத்துக்காகத்தான். மற்றபடி மாநிலங்களுக்கு என்று கலாச்சாரம் இல்லை என்று கூறுகிறார். நிர்வாக வசதிக்காக மட்டுமல்ல மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மொழி என்பது கலாச்சாரம். ஒவ்வொரு மனிதனுக்கு அவர்கள் சார்ந்து இருக்கக்கூடிய மொழி தான் முக்கியம்” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலகால விஷத்தைக் கக்கி இருக்கிறார். ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழகத்தின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழகத்திலும் நடக்கும்”

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா

“2019 செப்டம்பரில் பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

புளூம்பெர்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும். இதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், அதனை பாலமாக இருந்து நான் தீர்த்து வைப்பேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு செல்வதை விமர்சிக்கும் ரவி இதே போல் வெளிநாடு சென்ற பிரதமர் மோடியையும் விமர்சிப்பாரா? ”

பிரியா

சட்டென்று மாறிய வானிலை: சென்னையில் மழை!

தஞ்சை திருமணத்தில் பன்னீருடன் சந்திப்பா? சசிகலா வைத்த ட்விஸ்ட்!

Political leaders condemn to rn ravi
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel