ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன எலோன் மஸ்க்கிற்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ட்விட்டரை நேற்று (அக்டோபர் 27 ) தன்வசப்படுத்தினார்.
தற்போது அதிரடியான பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். முதல் நடவடிக்கையாக அந்நிறுவனத்தை வாங்கிய கையோடு சிஇஓ பராக் அகர்வாலை பணி நீக்கம் செய்தார்.
கடந்த ஏப்ரல் இறுதியில் சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்கப்போவதாக பேச்சு எழுந்தது. இருந்தாலும் இரு தரப்புக்குமான டீல் இழுபறியாக இருந்து வந்தது.
இது தொடர்பாக நீதிமன்றம் வரை பஞ்சாயத்து சென்றிருந்தது. இந்த நிலையில் ஒருவழியாக ட்விட்டர் இப்போது மஸ்க் கைவசம் ஆகியுள்ளது.
இந்நிலையில், இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி, மஸ்க் பொறுப்பேற்றதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 28 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “வாழ்த்துக்கள் எலோன் மஸ்க். ட்விட்டர் இப்போது வெறுப்பூட்டும் பேச்சுக்கு எதிராக செயல்படும். உண்மைச் சரிபார்ப்பு இன்னும் வலுவாக இருக்கும். மேலும் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக இந்தியாவில் எதிர்க்கட்சிகளின் குரலை இனி ஒடுக்காது என்று நம்புகிறேன்,”என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சிறிது காலம் நிறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், எலோன் மஸ்க்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி 2022 வரை தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நிறுத்தப்பட்டதை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்