பிப்ரவரி 13 ஆம் தேதி திங்கள் கிழமை காலையில் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து மூத்த தமிழ் தேசியவாதியும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவருமான நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த தகவல் உலகத் தமிழர்களை எல்லாம் உலுக்கி இருக்கிறது.
“விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமோடு உயிரோடு இருக்கிறார். இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கு ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் பழ.நெடுமாறன்.
ஆனால் அவரது இந்த அறிவிப்பு மீண்டும் பல யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் வித்திட்டு உள்ளது.
2009 ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவ்வப்போது உறுதியாக தெரிவித்து வந்திருக்கிறார் பழ.நெடுமாறன்.
இப்போது மீண்டும் அதே அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும் நேற்றைய அவரது அறிவிப்பு ஒரு திட்டமிட்ட முறைப்படியான அறிவிப்பாக கருதப்படுகிறது.

பழ.நெடுமாறன் தேசிய கட்சியான காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு தமிழ் தேசிய அரசியலுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தவர். ஈழத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் மற்ற பலர் மீது எழுந்த பண குற்றச்சாட்டுகள் இதுவரை நெடுமாறன் மீது எழுந்ததில்லை.
புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத நெடுமாறன் எளிய வாழ்வையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது தான் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரைக்கும் டெல்லி தாண்டி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் அவர்களோடு தொடர்பு கொண்ட தமிழ்நாட்டு பிரமுகர்களிடமும் இது பற்றி விசாரித்தோம்.
“விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009 மே 18ஆம் தேதி வீர மரணம் அடைந்ததை ஒட்டி அன்று முதல் ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அவருக்கு உலகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் சிலர் தலைவர் இன்னும் இருக்கிறார் தலைவர் விரைவில் வெளியே வருவார் என்றெல்லாம் கடந்த பத்து வருடங்களில் பலமுறை கூறியிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு வீடியோ பரபரப்பானது. அது என்னவென்றால் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதைப் போன்று அந்த வீடியோவில் காட்சிகள் இருந்தன. கண்கள் மட்டும் தெரிந்த அந்த வீடியோவில் நான் துவாரகா பேசுகிறேன். தலைவரின் லட்சியங்களை தலைவரின் ஆதரவோடு தொடர்ந்து நாம் முன்னெடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. தலைவருக்கு நீங்கள் உதவ வேண்டும். மீண்டும் நமது நடவடிக்கைகளை தொடங்குவதற்கு உங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதாவது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்டி எழுப்பப் போவதாகவும் அதற்காக நிதி வேண்டும் என்றும் துவாரகா பேசுவதைப் போன்று அந்த வீடியோ காட்சிகள் இருந்தன. இதை நம்பி பல்வேறு புலம்பெயர் தமிழர்கள் இந்திய மதிப்பில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்தனர்.
ஆனால் இந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயன்றனர். அந்த வீடியோவில் துவாரகா போல பேசிய அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர், ’உனக்கு நான்காம் வகுப்பு ஆசிரியர் யார்?’ என்று கேட்டார். ஏனென்றால் துவாரகாவை குழந்தையிலிருந்து முழுமையாக அறிந்தவர் அவர். அப்படி ஒரு கேள்வி கேட்ட போது துவாரகாவை போல பேசி நிதி சேகரித்த அந்த பெண்ணிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதை அவர் மற்ற புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துக் கூறி இது ஒரு மோசடியான முயற்சி என்று அப்போதே எச்சரித்தார்.
இதற்குப் பிறகு 2023 ஜனவரி 24ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

விழிப்புதான் விடுதலையின் முதற்படி என்ற முன் குறிப்போடு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்…. ‘ எமது தேசிய தலைவர் மற்றும் அவரது குடும்பம் தொடர்பாக புனைந்து பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற தகவல்களும் அதன் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பெருந்தொகை நிதி சேகரிப்பு செயற்பாட்டில் இயக்க விரோத கும்பல் ஒன்று ஈடுபடுவதாக அறிகின்றோம். இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எமது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
தேசிய தலைவரின் வாழ்வியல் வரலாற்றில் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களுக்காக என்றுமே அவர் வாழ்ந்ததில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவீர்கள். உண்மை இவ்வாறு இருக்க தேசிய தலைவரின் நற்பெயரை களங்கப் படுத்துவதற்காக புலனாய்வாளர்களால் திட்டமிட்டு இயக்கப்படும் இயக்க விரோத கும்பல்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது தொடர்பாக எம் மக்கள் எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் நிதி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டு தேசிய செயற்பாட்டில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து தேசிய தலைவர் மீதும் இயக்கத்தின் மீதும் அதீத பற்றுள்ள மக்களை இனங்கண்டு நிதி வசூலிப்பை நடத்தி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எமது விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைக்கும் சக்திகளின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருவதோடு புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரம் இன விடுதலை நோக்கிய பணிகளில் பயன்படுத்த முடியாதவாறு சிதைக்க முற்படுவதாக நாம் கருதுகிறோம்.
இது போன்ற மோசடிக்காரர்களை இனம் கண்டு புறந்தள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். தேசிய தலைவரையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற அப்பழுக்கற்ற தியாக வரலாற்றையும் கொச்சைப்படுத்தி எமது போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் செயற்பாடுகள் இவை. என்பதை எமது மக்கள் ஆழமாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்பு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை சார்பாக வி. ஜெயாத்தான் என்பவர் கையெழுத்திட்டு வெளியிட்டு இருந்தார்.
இது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை சார்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது அதில், ’தேசியத் தலைவரும் குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருப்பதாக கூறி கொள்ளை கும்பல் ஒன்று பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிற விடயம் அறிந்து நாம் எமது தேடுதலை முடுக்கி உள்ளோம். ஆரம்ப கட்டமாக சில விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
அதன்படி சுவிட்சர்லாந்தில் 4 நபர்கள், பிரான்சில் மூன்று நபர்கள், இங்கிலாந்தில் மூன்று நபர்கள், நெதர்லாந்து இரண்டு நபர்கள், ஜெர்மனியில் இரண்டு நபர்கள், இத்தாலியில் ஒரு நபர், பெல்ஜியத்தில் ஒரு நபர் இவர்களுடைய பெயர் விவரங்களை வெகு விரைவில் வெளியிடுவோம்’ என்று எச்சரித்திருந்தனர்.

இப்படிப்பட்ட நிலையில் தான் தஞ்சாவூரில் அப்பழுக்கற்ற தமிழ் தேசிய தலைவராக கருதப்படும் பழ.நெடுமாறன் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
90 வயதை நெருங்கும் பழ. நெடுமாறன் தமிழீழ அரசியல் நிலைப்பாட்டில் மாறாத பற்று உடையவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். அவரது நம்பிக்கையை வெளிநாடுகளில் இருக்கும் வசூல் வேட்டையாளர்கள் பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டுவிடுவார்களோ என்ற கவலையும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-வேந்தன்
”எங்கள் வலியை உணருங்கள்” : நெடுமாறன் பேட்டி பற்றி ஈழத் தமிழர்கள்
‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ : கதையம்சம் என்ன?