அதிமுக தலைமை கழகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 14) விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயத்தில் கட்சி அலுவலகத்துக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமானது. இதையடுத்து வருவாய்த் துறையினர் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
இந்தச் சீலை அகற்றக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 12ஆம் தேதி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அவர் தாக்கல் செய்த மனுவில், பொதுக்குழு நடைபெறும் சமயத்தில் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறி பாதுகாப்பு கேட்டு அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் காவல் துறையில் புகார் அளித்தும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
பன்னீர்செல்வம் தனது ஆட்களுடன் கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதுடன் அங்கே இருந்த கோப்புகளையும் எடுத்துச் சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அதிமுகவினர் 14 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சொத்துரிமை பிரச்சினை இருந்தால் மட்டுமே சீல் வைப்பதற்கான சட்டப்பிரிவுகளை அமல்படுத்த முடியும். கட்சி அலுவலகத்தைப் பொறுத்தவரை அதுபோன்ற எந்த பிரச்சினையும் இல்லை. இடைக்கால பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் அலுவலகத்தின் மீதான உரிமை எனக்குத்தான் இருக்கிறது. எனவே கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதுபோன்று ஓ.பன்னீர்செல்வம் தலைமைக் கழகத்திற்குச் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதில், எடப்பாடி பழனிசாமி தன்னை பொதுச் செயலாளர் என்று அறிவித்தது உரிமையியல் நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது. இதுநாள் வரை தன்னை எந்த நீதிமன்றமும் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றோ, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் என்றோ அறிவிக்கவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சித் தலைமை அலுவலகத்துக்குள் நுழைய தனக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. முறையாக விசாரணை நடத்தாமல் சீல் வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே வருவாய்க் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ் நேற்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு ஆஜராகி, கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.
இதை கேட்ட நீதிபதி, மனுதாரர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று உரிய நடைமுறைகள் முடிந்த பின் வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தார். அதேபோல் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்த அனைத்து நடைமுறைகளும் முடிந்து இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி சதீஷ்குமார் முன்பு மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளது.
எனவே அதிமுக அலுவலகம் திறக்கப்படுமா, யார் வசம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-பிரியா