மாணவி பிரியா உயிர் இழப்பு குறித்த மருத்துவக்குழுவின் முழு அறிக்கை, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட நீர் வழி தடங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி இன்று(நவம்பர் 16) நடைபெற்றது.
இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று, பொதுமக்களுக்கு கொசு வலைகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் நீர் வழித் தடங்கள் அருகில் வசிக்கும் பொது மக்களுக்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரம் கொசுவலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பருவ மழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம்கள் முதன்முறையாக நடத்தப்படுகிறது என்றார்.
கால் பந்தாட்ட வீராங்கனை மரணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதியப்பட்ட பிறகே உடல் கூராய்வு செய்யப்பட்டது.
மருத்துவர்களின் முதல் கட்ட அறிக்கையை வைத்துத் தான் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குழுவின் இறுதி அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால், அவர்களை காவல்துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்”என்றார்.
திமுக ஆட்சியில் மருத்துவத்துறை சீரழிந்து விட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன்.
“அண்மையில் குஜராத் மாநில தொங்கு பால விபத்தில் பலர் உயிரிழந்தனர். அந்த பாலத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் இது கடவுளின் விதி என்று சொன்னார்.
அப்படி எல்லாம் கூறி நாங்கள் தப்பித்துக் கொள்ள மாட்டோம். நேற்றைக்கு நடந்ததை கவனக்குறைவு என்பதை நேரடியாகவே ஒத்துக் கொண்டோம். அதற்காக மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறோம். உண்மை என்னவோ அதை உலகுக்கு அறிவிப்போம்” என்றார்.
கலை.ரா