என்ன மணி அடித்தாலும் பப்பு வேகாது என்று பேசியுள்ள ஓ.பன்னீர்செல்வம் தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பார் என்று பழனிசாமிக்கு சவால் விடுத்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று(டிசம்பர் 21) சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக என்ற இயக்கம் சாதாரண அரசியல் கட்சி அல்ல. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இது தான் இன்னும் தொண்டர்களிடம் ஒலித்துகொண்டு இருக்கிறது. இதை ரத்து செய்த மகாபாவிகளை மக்களும் இந்த நாடும் மன்னிக்காது.
சர்வாதிகார உச்சநிலையில் நின்றுகொண்டு நான் நினைப்பது தான் கட்சியின் சட்டம் என நினைத்தவர்கள் தோற்கும் சூழல் வந்துள்ளது.
ஓபிஎஸ் என்கிற சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியும் என்பதை இந்த கட்சி காட்டி இருக்கிறது. உச்சபட்ச அதிகாரத்தை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் தொண்டர்களிடம்தான் இருக்கும்.
இன்றைக்கு என்ன நிலைமை? இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வார்களாம், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவார்களாம். என்ன மணி அடித்தாலும் இனி பப்பு வேகாது.
என்ன ஒரு தைரியம்? சாதாரண தொண்டர் நினைத்தாலும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நிற்கலாம் என சட்டத்திருத்தம் செய்வார்களாம் . இந்த ஜனநாயக படுகொலையை தடுத்து நிறுத்தும் சக்தி தான் தொண்டர்கள்.
எங்கள் உயிரே போனாலும் தலைமையை தேர்வு செய்யும் தொண்டர்கள் உரிமையை போக விட மாட்டோம். உனக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்கிப் பார். கட்சியை கபளிகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.
கலை.ரா
பொன் விழா காணும் அண்ணா மேம்பாலம்: புனரமைப்பு பணிகள் தீவிரம்
அதிமுகவில் இடைச்செருகல்களை நீக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்