சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை (செப்டம்பர் 26) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011 – 2016 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்தன.
அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
முந்தைய விசாரணையில் அமலாக்கத்துறையின் கைது மற்றும் விசாரணை குறித்து நீதிபதிகள் அதிரடியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
குறிப்பாக போக்குவரத்துத் துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப் போகிறதா அல்லது 1,000-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கைத் தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை விசாரிக்கப் போகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த வழக்கில் மொத்தம் 47 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக இருக்கிறார்கள். பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டிருக்கிறது. எனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், “ஒரே வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறை கூறுகிற படி வழக்கை தனித்தனியாக விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்றும், அதன் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணையை நிறைவு செய்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்க இருப்பதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மாணவி வீட்டில் வெடிகுண்டு வீச்சு… தோழியின் காதலன் செய்த சம்பவம்!
கான்பூர் டெஸ்டில் அஸ்வின் எட்டவுள்ள சாதனைகள்… அடடே சூப்பர்தான்!