நடிகை அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்னும் சற்று நேரத்தில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகிறார். Will Seeman be arrested today
நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த பாலியல் புகாரில் நேற்று (பிப்ரவரி 27) அவரது வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. இதையடுத்து அந்த சம்மன் கிழித்து எறியப்பட்டதும், சீமான் வீட்டு காவலாளி அமுல்ராஜ் , டிரைவர் சுபாகர் கைது செய்யப்பட்டதும், அதைத்தொடர்ந்து சீமான் அளிக்கும் பேட்டிகளும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தநிலையில், சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராவதற்காக தர்மபுரியில் இருந்து சேலம் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது பேட்டி அளித்த அவர், நான் கைதுக்கெல்லாம் பயப்படவில்லை” என்று பேட்டி அளித்தார்.
தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றார். அங்கு தனது வழக்கறிஞர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
“அண்ணனை கைது செய்துவிடுவார்களோ… அடுத்த இரண்டு நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை. . ஒருவேளை கைது செய்தால் என்ன செய்வது” என நாம் தமிழர் கட்சியினரும் தீவிரமாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சீமான் ஆஜராவதையொட்டி போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்த கேள்விகளுடன் தயாராக இருக்கின்றனர். இதையொட்டி கூடுதல் போலீசாரும் வளவசரவாக்கத்துக்கு வரவழைக்கப்பட்டு, காவல் நிலையம் முன்பு பேரிகார்டுகள் வைத்து தடுப்புகள் அமைத்துள்ளனர்.
இந்தநிலையில், சீமான் வருவதற்கு முன்னதாகவே, நாம் தமிழர் கட்சியினரும் வளசரவாக்கம் காவல்நிலையம் முன்பு குவிந்துள்ளனர். குறிப்பாக நாதக பெண் நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பேரிகார்டுகளை அகற்றச்சொல்லி வலியுறுத்தி வருகின்றனர்.
தங்களை காவல் நிலையத்திற்குள் அனுமதிக்க கோரி பெண் நிர்வாகிகள் கேட்க, நாங்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. கடமையைதான் செய்கிறோம் என்று காவல்துறையினர் பதிலளிக்க வாக்குவாதம் முற்றியதால் நாம் தமிழர் கட்சியினர் வளசரவாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
சீமான் ஆஜராவது தொடர்பாக நாம் விசாரித்த போது, “இன்று அவரிடம் முதல்கட்ட விசாரணைதான் நடைபெறும். பிரஸ்மீட்டில், விஜயலட்சுமிக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட சில விஷயங்களை அவரே ஒப்புதல் வாக்குமூலமாகவே சொல்லியிருக்கிறார்.
ஏசி ரூம், சோளக்காடு வார்த்தைகளை சீமான் பயன்படுத்தியிருக்கிறார். அதை வைத்து கேள்விகள் கேட்கப்படும். அவரது பதிலை வைத்துதான் விசாரணை எவ்வளவு நேரம் நடக்கும் என்பது தெரியும். ஆனால், இன்று கைது செய்ய வாய்ப்புகள் குறைவு. அடுத்தகட்ட விசாரணைகள் உள்ளது. அவர் விஜயலட்சுமியிடம் பேசிய உரையாடல்கள் உள்ளன. அதுகுறித்தும் ஆய்வு செய்யப்படும் ” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
இன்னும் சற்று நேரத்தில் வடபழனியில் இருந்து வளசரவாக்கம் கிளம்பவுள்ளார் சீமான். Will Seeman be arrested today