கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பாரா இல்லையா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை கடந்த 5 ஆம் தேதி திறந்து வைக்கப்படுவதாக இருந்தது.
இந்த மருத்துவமனையை திறந்து வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
ஆனால், குடியரசுத் தலைவர் ஜூன் முதல் வாரத்தில் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பதால் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி ஒத்திவைக்கப்பட்டது.
மருத்துவமனை திறப்பு விழா தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜூன் 15 ஆம் தேதி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 12) சென்னை மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவரை அழைத்திருந்தது உண்மை. அவரும் வருவதாக கூறியிருந்தார்.
230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு தயார் நிலையில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனை. 146 கோடியில் மருத்துவ உபகரணங்களும் வாங்கி கொடுத்துள்ளோம். தயார் நிலையில் இருக்கக்கூடிய ஒரு மருத்துவமனை திறப்பு விழாவிற்காக நீண்ட நாட்கள் காத்திருப்பது என்பது சரியாக இருக்காது.
எனவே மக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்ட மருத்துவமனை மக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் வர வேண்டும் என்பதற்காக வரும் 15 ஆம் தேதி திறந்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவர் வருவாரா இல்லையா என்பது ஓரிரு நாட்களில் தெரிய வரும்.
இருந்தாலும் குறிப்பிட்ட தேதியில் மருத்துவமனை திறந்து வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மோனிஷா
மருத்துவ பொது கலந்தாய்வு: மத்திய அமைச்சரை சந்திக்கும் மா.சுப்பிரமணியன்
ராஜேஷ்தாஸ் வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த நீதிமன்றம்!