வைஃபை ஆன் செய்ததும் முன்னாள் அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த செய்தி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மக்களவைத் தேர்தலுக்காக திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிற நிலையில்… கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு தற்போதைய எம்.பி.யான கௌதம சிகாமணி போட்டியிட வேண்டாம் என்றும், அவர் பொன்முடியின் சட்டமன்றத் தொகுதியான திருக்கோவலூர் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் தலைமை அறிவுறுத்தியது.
அப்போது பொன்முடி, ’இந்த வழக்கில் நான் வெற்றி பெற்று மீண்டும் எம்எல்ஏவாக வருவேன். அதனால் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் தேர்வில் எனது வழக்கைப் பற்றி போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்’ என்று தலைமையிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் பொன்முடியின் நம்பிக்கைக்கு ஏற்ற மாதிரியே… அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது. இந்த உத்தரவின் விளைவாக பொன்முடி இழந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவி அவருக்கு மீண்டும் கிடைக்கும் என்று திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் திருக்கோவலூர் சட்டமன்ற தொகுதியை காலியாக இருக்கிறது என அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியது. இப்போது உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவிட்ட நிலையில், சட்டப்பேரவைச் செயலகம் தான் எழுதிய கடிதத்தை திரும்ப பெற்றுக் கொண்டு பொன்முடியை மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர அனுமதிக்கும் என்று தெரிகிறது.
பொன்முடி சட்டப்படி மீண்டும் எம்.எல்.ஏ.வாக ஆகிவிட்டாலும் அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்ற விவாதங்கள் திமுகவில் எழுந்துள்ளன. தேர்தல் நெருங்கி வருகிற இந்த நிலையில் பொன்முடியை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் ஆளுநருக்கு பரிந்துரைத்தால்… ஆளுநர் அதை உடனடியாக ஏற்றுக் கொள்வாரா என்ற விவாதமும் முதலமைச்சரின் வட்டாரத்திலேயே நடந்து வருகிறது.
அதாவது உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இறுதியான உத்தரவு அல்ல என்ற அடிப்படையில் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவதற்கு தார்மீக ரீதியில் ஆளுநர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். அது தேர்தல் நெருங்கும் நேரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே தேர்தலுக்குப் பிறகு பொன்முடியை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாமா என்ற ஆலோசனையும் முதலமைச்சரின் வட்டாரத்தில் நடந்து வருகிறது என்கிறார்கள். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடுத்தடுத்த சட்ட விளைவுகள் தொடர்பாகவும் ஆலோசனை நடந்திருக்கிறது.
இது மட்டுமல்ல அவ்வாறு பொன்முடி அமைச்சரவையில் சேர்க்கப்பட்டாலும், அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வித்துறை அவருக்கு மீண்டும் வழங்கப்படுமா என்ற அடுத்த கேள்வியும் எழுந்துள்ளது.
இப்போது அந்த துறைக்கு அமைச்சராக இருக்கும் ராஜ கண்ணப்பன் வட்டாரத்திலேயே இதுகுறித்த விவாதங்கள் வந்தபோது, ‘உயர்கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்றதிலிருந்து அமைச்சரின் செயல்பாடுகளில் முதலமைச்சரும் அவரது குடும்பத்தாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனவே பொன்முடிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக இருந்தாலும் உயர்கல்வி துறையை மீண்டும் ஸ்டாலின் வழங்குவாரா என்பது கேள்விக்குறிதான்’ என்று கண்ணப்பன் தரப்பினர் நம்பிக்கையாக சொல்லி வருகிறார்கள்.
உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய தகவல் வந்ததுமே அமைச்சர் உதயநிதி பொன்முடியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று உதயநிதி சொல்ல, ’எங்கள் குடும்பமே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கு’ என்று பதிலுக்கு உருக்கமாக தெரிவித்துள்ளார் பொன்முடி.
இதையடுத்து தண்டனை ரத்து செய்யப்பட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்காக பொன்முடி இன்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது, தான் மீண்டும் அமைச்சராகி விட்டால் அது வருகிற மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு அரசியல் ரீதியில் பலம் சேர்ப்பதாக இருக்கும் என்று அவர் முதலமைச்சரிடம் வேண்டுகோள் வைத்திருப்பதாக கூறுகிறார்கள் பொன்முடியின் ஆதரவாளர்கள்.
பொன்முடியை அமைச்சரவையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாமா என்பது பற்றிய சட்ட ரீதியான, அரசியல் ரீதியான, கட்சி ரீதியிலான ஆலோசனையில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தலுக்கு முன்பாக ராஜினாமா செய்த தேர்தல் ஆணையர்… காரணம் பாஜகவா? என்ன நடக்கிறது?
தேர்தல் நேரத்தில் சிஏஏ அமல் : ஸ்டாலின், பினராயி, மம்தா கடும் எதிர்ப்பு!