அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகளிலிருந்து விலகப்போவதில்லை என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரை சொத்துக்குவிப்பு வழக்குகளில் கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன.
இதை எதிர்த்து கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.
இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், லஞ்ச ஒழிப்புத் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி பொன்முடி மீதான வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கிலிருந்து நான் விலகமாட்டேன். நான்தான் விசாரிக்கப் போகிறேன் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 20) அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகினார். அவர், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுவதாகத் தெரிவித்தார். வழக்கின் விசாரணையிலிருந்து நீதிபதி விலக வேண்டுமெனவும் கோரினார்.
தங்கம் தென்னரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் ஆஜராகி, நீதிமன்றத்தின் கவனத்திற்கு வரக்கூடிய ஒரு விசயத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்ய வேண்டும் என வாதிட்டார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தலைமை நீதிபதி அனுமதி பெற்றுத்தான் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளேன், எந்த வழக்கின் விசாரணையிலிருந்தும் விலகப்போவதில்லை. சூமோட்டோ பதிவு செய்ததை எதிர்த்து ஏன் யாரும் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. உங்கள் வழக்கு தரமான வழக்காக இருந்தால் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.
தொடர்ந்து, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கை நவம்பர் 2ஆம் தேதிக்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கும் தள்ளிவைத்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
அதிமுக – பாஜக பிரச்சினை – ஒரே காமெடி : உதயநிதி பதில்!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுப்பு!