கெஜ்ரிவால் பிரச்சாரம் கைகொடுத்ததா? டெல்லி மக்களின் மனநிலை என்ன?

அரசியல் சிறப்புக் கட்டுரை

இந்தியாவின் தலைநகர் டெல்லியின் நாடாளுமன்றத் தேர்தல் களம் அனல் கொதிக்கிறது. குறிப்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நெருக்கத்தில் கைது செய்யப்பட்டதும், இடைக்காலப் பிணை பெற்று வெளியில் வந்திருப்பதும், நாடு முழுதும் கவனிக்கப்படும் தலைவராக அவரது இமேஜை உயர்த்தியுள்ளது.

டெல்லியில் மொத்தம் 7 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 7 தொகுதிகளையுமே பாஜகவே கைப்பற்றியது. ஆனால் அதற்கு நேர்மாறாக அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற்ற 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது.

தேர்தல்களில் டெல்லி மக்களின் அணுகுமுறை

டெல்லி மக்களைப் பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தலில் வேறு மாதிரியாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் வேறு மாதிரியாகவுமே வாக்களிப்பவர்களாக இருக்கின்றனர். இதன் காரணமாகத் தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18% வாக்குகளே பெற்றிருந்த ஆம் ஆத்மி கட்சி, 2020 சட்டமன்றத் தேர்தலில் 53.5% வாக்குகளைக் கைப்பற்றியது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை டெல்லியில் பாஜகவே செல்வாக்கு செலுத்தும் கட்சியாக இருந்து வருகிறது.

ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் பலம்

இந்த தேர்தலில் நடந்திருக்கும் மாற்றத்தில் முக்கியமானது என்னவென்றால், கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தனித்தனியாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து போட்டியிடுகின்றன. இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் பிரியாமல் இந்தியா கூட்டணிக்கு விழும் என்பதால் இந்த கூட்டணி பலமாக மாறியிருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக பெற்ற வாக்கு சதவீதங்களை சேர்த்தால் 40.62% வாக்குகளைப் பெற்றிருக்கின்றன. அதேசமயம் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதங்களை சேர்த்தால் 48% வருகிறது. அந்த தேர்தலில் 7 தொகுதிகளையும் வென்ற பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 46.4% சதவீதமே. இதனால் தான் இந்த கூட்டணி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் நேரத்தில் கைது செய்யப்பட்டது மக்களிடையே ஏற்படுத்திய அனுதாபமும் இந்தியா கூட்டணிக்கு பாசிட்டிவாக மாறியிருக்கிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் கெஜ்ரிவால் வெளியே வந்து டெல்லியில் செய்திருக்கும் பிரச்சாரமும் கணிசமான ஆதரவு தளத்தினை இந்தியா கூட்டணிக்கு கொண்டு வந்திருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 7 தொகுதிகளிலும் பாஜகவே நேரடியாக போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.

இஸ்லாமியர் மற்றும் உழைக்கும் மக்களின் வாக்குகள் யாருக்கு?

டெல்லியிலுள்ள 7 தொகுதிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11.7% இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக வடகிழக்கு டெல்லி மற்றும் மத்திய டெல்லி ஆகிய இரண்டு மண்டலங்களில் இஸ்லாமியர்கள் சுமார் 30% இருக்கின்றனர். காங்கிரசும் ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிடுவதால் இஸ்லாமியர்களின் வாக்குகளில் பெரும்பாலான வாக்குகள் பிரியாமல் இந்தியா கூட்டணிக்கு விழும் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஸ்லம்கள் எனப்படும் உழைக்கும் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் அதிகம் டெல்லியில் இருக்கின்றன. டெல்லியில் மொத்தம் 675 ஸ்லம்கள் இருக்கின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மற்றும் குடிசைப் பகுதி மக்களின் வாக்குகள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக இருக்கின்றன.

எனவே ஸ்லம்களைக் குறிவைத்து பாஜக, ஆம் ஆத்மி இரண்டு கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தினை செய்திருக்கின்றன. வடகிழக்கு டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் சாந்த்னி செளக் ஆகிய தொகுதிகளில் ஸ்லம்களில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

டெல்லியில் ஆம் ஆத்மி அரசாங்கம் கொண்டு வந்த இலவச தண்ணீர், இலவச மின்சாரம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஸ்லம்களின் ஆதரவைக் கூட்டியிருக்கிறது. அப்பகுதிகளில் மருத்துவ கிளினிக்குகள் உருவாக்கியது, பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தியது போன்றவையும் ஆம் ஆத்மியின் செல்வாக்கை இப்பகுதிகளில் கூட்டியிருக்கின்றன. ஆம் ஆத்மி கட்சியின் Stronghold என்று இப்பகுதிகள் பார்க்கப்படுகின்றன.

பாஜக இந்த பகுதிகளைக் கைப்பற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இப்பகுதிகளைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு மத்திய அரசிலிருந்து வீடுகள் ஒதுக்கியதை மையப்படுத்தி தனது பிரச்சாரத்தினை பாஜக மேற்கொண்டிருக்கிறது. ஆனாலும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவை இப்பகுதிகளின் முக்கியப் பிரச்சினைகளாக மக்களால் பார்க்கப்படுவதால், ஸ்லம்களைப் பொறுத்தவரை பாஜகவை விட இந்தியா கூட்டணி ஒரு படி முன்னே இருக்கிறது என்கிறார்கள் டெல்லியின் அரசியல் விமர்சகர்கள்.

பெண்கள் வாக்கு யாருக்கு?

பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் என தமிழ்நாட்டைப் பின்பற்றி டெல்லியில் ஆம் ஆத்மி அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெண்களின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சிக்கு பெற்றுத் தரும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் நம்புகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால் ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரத்தை மையப்படுத்தி பெண்கள் மத்தியில் ஆம் ஆத்மிக்கு எதிரான பிரச்சாரத்தினை பாஜக மேற்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் மீடியாக்களில் எதிரொலிப்பதைப் போல, கிரவுண்டில் பெரிதாக எதிரொலிக்கவில்லை என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில்.

சிட்டிங் எம்.பிகளுக்கு சீட்டு கொடுக்காத பாஜக

டெல்லியின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டப்படும் விவகாரத்திலும் ஒரு கலவையான மனநிலையே மக்களிடையே இருக்கிறது. மேலும் இந்த முறை பாஜக எம்.பிக்களுக்கு மக்களிடையே எதிர்ப்பு இருக்கும் என்பதை உணர்ந்த பாஜக, எப்படியாவது 7 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என்று சிட்டிங் எம்.பிக்களில் 6 பேருக்கு சீட்டு கொடுக்கவில்லை. வடகிழக்கு டெல்லியில் போட்டியிடும் மனோஜ் திவாரியைத் தவிர மற்ற அனைத்து சிட்டிங் எம்.பிக்களையும் மாற்றி வேறு வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.

புலம்பெயர்ந்தவர்களின் முக்கியத்துவம்

அடுத்ததாக இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பிரதேசமாக டெல்லி இருக்கிறது. 2019 இல் வெளியான புலம்பெயர்ந்தோர் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பார்த்தால் டெல்லியின் மக்கள் தொகையில் 63 லட்சம் பேர் வேறு மாநிலங்களில் இருந்து குடியேறிவர்கள். இதில் பெரும் பகுதியினர் டெல்லியின் வாக்காளர்களாக மாறியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உத்திரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இருந்து குடியேறியவர்கள் என்பதால் அவர்களின் வாக்குகள் யாருக்குப் போகும் என்பதும் வெற்றி தோல்வியில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

பாஜகவின் பிரச்சாரம்

பாஜக இந்த முறையும் 7 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று பல முயற்சிகளை செய்திருக்கிறது. பாஜகவின் ஹை புரோஃபைல் தலைவர்கள் பெரும்பாலானோர் டெல்லியில் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்திரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் என ஏராளமானோர் டெல்லியில் களமிறங்கி பாஜகவிற்கு பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

மிடில் கிளாஸ் என்ன நினைக்கிறது?

டெல்லியின் மிடில் கிளாசைப் பொறுத்தவரை, கருத்துக்கணிப்பை மேற்கொண்டவர்கள் சொல்வது என்னவென்றால், அவர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதையும், பிரதமரைத் தேர்ந்தெடுப்பதையும் வெவ்வேறாக அணுகுகிறார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரை உள்ளூர் பிரச்சினைகளை விட ஒரு வலிமையான பிரதமர் வேண்டும் என்ற எண்ணம் மிடில் கிளாசில் பலரிடம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இந்த நம்பிக்கை தொண்டர்களை விட பாஜக உயர்மட்டத் தலைவர்களிடம் மட்டுமே தெரிகிறது.

அதிருப்தி வாக்குகள் பிரியாதது, விலைவாசி உயர்வு போன்றவை பாஜகவிற்கு நெகடிவ் ஃபேக்டர்களாக இருக்கிறது என்கிறார்கள் இதுவரை டெல்லியில் பாஜக வெற்றி பெறும் என்று சொல்லிவந்த பத்திரிக்கையாளர்கள்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

இனி இந்தி பெல்ட் இப்படித்தான்…மோடிக்கு சவால் விடும் 34 வயது இளைஞர்…இளைஞர்களின் நாயகனாக உருவெடுத்த தேஜஸ்வி யாதவ்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *