இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறுவாரா கெஜ்ரிவால்? அனல் பறக்கும் டெல்லி தேர்தல் களம்!

Published On:

| By Kavi

டெல்லி தேர்தலையொட்டி நேர்மையற்றவர்கள் என ஆம் ஆத்மி வெளியிட்ட போஸ்டர் காங்கிரஸ், பாஜகவை கடுப்பாக்கியுள்ளது.

பாஜகவுக்கு அதிகரித்த வாக்கு சதவீதம்

டெல்லியை பொறுத்தவரை 1998ல் இருந்து 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இல்லை. 1998 முதல் 2013 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு 2013ல் டெல்லியில் ஆம் ஆத்மி வென்ற நிலையில், அக்கட்சித் தலைவர் கெஜ்ரிவால் வெறும் 48 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். 2014ல் ஓராண்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, 2015 சட்டமன்றத் தேர்தலிலும், 2020 சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை பெறுவதற்கு 36 இடங்கள் தேவை. இதில், 2020 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 53.57 சதவீதம் வாக்குகளையும், அதற்கு அடுத்த நிலையில் பாஜக 38.51 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி 4.26 சதவீத வாக்குகளையும் பெற்றன.

2015 தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு சதவீதம் 54.59 ஆக இருந்தது. அதேபோல் பாஜகவின் வாக்கு சதவீதம் 32.78 %ஆகவும், காங்கிரஸ் வாக்கு சதவீதம் 9.70 ஆகவும் இருந்தது.

2015 தேர்தலை ஒப்பிடுகையில் 2020ல் ஆம் ஆத்மிக்கு 1.02 சதவிகித வாக்குகள் குறைந்தன. அதேசமயம் பாஜகவுக்கு 5 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் அதிகரித்தது. காங்கிரஸுக்கு சுமார் 5 சதவீத வாக்குகள் குறைந்தன.

இந்தநிலையில் 2025 தேர்தலை எதிர்கொள்கிறது டெல்லி. டெல்லிக்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்தலையொட்டி, தீவிர பிரச்சாரங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

களத்தில் மாநில முதல்வர்கள்

இதில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சி ஆளும் மாநில முதல்வர்களை களத்தில் இறக்கி, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று முன்தினம் டெல்லி வந்து பிரச்சாரம் செய்தார். ஆளும் ஆம் ஆத்மி கட்சி, வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானை களமிறக்கியுள்ளது.

காங்கிரஸும் இதே யுக்தியை கையாண்டு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அழைத்து தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்க செய்தது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரும் டெல்லி தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இதுமட்டுமின்றி டெல்லியில் தினசரி மூன்று பேரணிகளை நடத்தி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குகளை சேகரித்து வருகிறார். முக்கிய வாக்குறுதிகளை ஒரே நேரத்தில் அறிவிக்காமல், அடுத்தடுத்த நாட்களில் பல வாக்குறுதிகளை வெளியிட்டு டெல்லி மக்களை பாஜக கவர்ந்து வருகிறது.

இன்று (ஜனவரி 25) இறுதியாக கடைசி கட்ட வாக்குறுதி பட்டியலை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அதில், “டெல்லியில் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கும் 13,000 கடைகளை சட்டப்படி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மூன்று ஆண்டுகளில் யமுனை நதி தூய்மைப்படுத்தப்படும், காற்று மாசுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போதைய நிலவரப்படி டெல்லி தேர்தல் களம் பாஜக vs ஆம் ஆத்மி என்றபடி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

காங்கிரஸ் புது வியூகம்

இந்தசூழலில் காங்கிரஸ் கட்சி புது வியூகத்தை வகுத்து, ஓக்லா, சீலம்பூர், பாபர்பூர், முஸ்தபாபாத், மதியா மஹால், பல்லிமறன், சாந்தனி சௌக், கஸ்துபாநகர், பட்லி என சிறுபான்மையினர், தலித் மக்கள் மற்றும் பூர்வாஞ்சல் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், இந்த தொகுதிகளில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.

வெடித்த போஸ்டர் போர்!

இந்தநிலையில் தான், ஆம் ஆத்மி வெளியிட்ட போஸ்டரால் அக்கட்சிக்கு காங்கிரஸ், பாஜகவில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

‘நேர்மையற்ற தலைவர்கள்’ என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி. அதில், “இவர்களை எல்லோரையும் காட்டிலும் கெஜ்ரிவாலின் நேர்மை மேலானது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் காங்கிரஸ் தலைவர்கள் சந்தீப் தீக்‌ஷீத், அஜய் மேக்கேன் மற்றும் டெல்லி பாஜக தலைவர்கள் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேர்மையற்றவர் என்று கூறியிருப்பது, காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெஞ்சிய கெஜ்ரிவால்

கல்காஜி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அல்கா லம்பா, “இந்தியா கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று அறிவிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தைரியம் இருக்கிறதா?. காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்.பி.க்கள் உள்ளன. ஆனால் டெல்லியில் உள்ள 7 எம்.பி.தொகுதிகளையும் பாஜகவுக்கு விட்டுகொடுத்த கட்சிதானே ஆம் ஆத்மி. தேர்தலின் போது நீங்கள்(அரவிந்த் கெஜ்ரிவால்) கூட்டணிக்காக எங்களிடம் கெஞ்சியது நினைவில்லையா. டெல்லியில் உள்ள 7 இடங்களுக்காக உங்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. இதனால்தான் காங்கிரஸ் டெல்லியில் பெரும் இழப்பை சந்திக்க நேரிட்டது” என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி, சந்தீப் தீக்சித், “கெஜ்ரிவால் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்தான் நேர்மையற்றவர். காங்கிரஸ் ஊழல் செய்திருந்தால் நான் உங்கள் முன்வந்து நிற்க மாட்டேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. 2015 ஆம் ஆண்டு முதல் கெஜ்ரிவாலை பாராளுமன்ற பொது கணக்கு குழு விசாரித்து வருகிறது. எங்களுக்கு எதிராக ஒரு ஆதாரம் கிடைத்திருந்தால் கெஜ்ரிவால் சும்மா விடுவாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னதாக டெல்லியின் ரிதாலா பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு மோசமான நிலையில் இருந்த வடிகால்களை ஆய்வு செய்தார். அப்போது, டெல்லியை பாரிஸைப் போல ஜொலிக்கச் செய்வேன் என்று 2019 ஆம் ஆண்டு கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டினார். இந்த வீடியோவை தற்போது காங்கிரஸ் கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியை போலவே தற்போது பாஜகவும் ஆம் ஆத்மிக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் ஊழல் இதுவரை இல்லாத அளவிலானது. கெஜ்ரிவாலை போன்ற பொய்யரை பார்த்தது இல்லை என்று வாக்குறுதிகளை வெளியிட்ட பின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “உங்கள் முதல்வர் அதிஷி நேர்மையானவரா? அவரது புகைப்படம் ஏன் போஸ்டரில் இல்லை. பொய் வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்த நீங்கள் அகற்றப்படுவீர்கள். பாஜக ஆட்சியில் அமரும்” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பாஜகவினர் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் ஆளுயர கட்-அவுட்டை யமுனை நதியில் மூழ்கச் செய்து, ஆம் ஆத்மி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என நூதன தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறாக டெல்லி தேர்தல் களம் அனல் பறந்துகொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share