வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 16 ) கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உட்பட தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட ஓபிஎஸ் பிரிவு தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிவன் பெயரில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு (ஓபிஎஸ் அணி) சார்பில் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், தாராபுரம் ரோடு, பழநி சாலை, திண்டுக்கல் சாலை, செக்போஸ்ட் நாகனம்பட்டி சாலை, ரயில் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
இதேபோல், ராமநாதபுரம், சங்கரன்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எடப்பாடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று(மார்ச் 16) செய்தியாளர்களை சந்தித்தார் .
அப்போது அவரிடம் “உங்கள் ஆதரவாளர் சையது கான், அமமுக உடன் ஓபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் ”வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்