இன்று மாலை சென்னை வரும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியையும், பன்னீரையும் சந்திக்க நேரம் ஒதுக்குவாரா என்ற எதிர்பார்ப்பில் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரமும் காத்துக்கொண்டிருக்கிறது.
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்து உச்ச உயர் நீதிமன்றம் வரை விவகாரம் சென்றிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதன்முறையாகக் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்காக டெல்லி பறந்தார். அப்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து அதிமுக உட்கட்சி விவகாரம், ரெய்டு மற்றும் குட்கா விவகாரத்தில் சிபிஐ நடவடிக்கை ஆகியவை பற்றியும் பேசத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க இரு தலைவர்களும் நேரம் ஒதுக்கவில்லை. ராம்நாத் கோவிந்தத்துடன் பிரதமர் மோடியை அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாகச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதும் கூட எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பிரதமர் ஒரு வாழ்த்து கூட சொல்லவில்லை என்று எடப்பாடி தரப்பினர் கூறுகின்றனர்.
இதனால் அதிருப்தியுடன் சென்னை திரும்பிய அவர், 28ஆம் தேதி மோடியைக் கண்டிப்பாகச் சந்திப்பார் என்று ஜூலை 25ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெயக்குமார் கூறினார்.
அதே ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையிடுவதை அனுமதிக்கமாட்டோம். அது பாஜகவுக்கும் தெரியும், பிரதமருக்கும் தெரியும். அதனால் பிரதமர் எங்கள் உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டார் என்று கூறினார். இதனால் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நடைபெறாது என்றே தெரிகிறது.
இதுகுறித்து எடப்பாடி ஆதரவாளார்கள் கூறுகையில், சென்னை வரும் பிரதமரை எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கு சென்று பிரதமரை வரவேற்றுவிட்டு அத்துடன் சென்றுவிடுவார் என்கிறார்கள்.
பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, பன்னீரும் எடப்பாடியும் தனித்தனியாக டெல்லி சென்ற போது பிரதமர் இருவரையும் சந்திக்கவில்லை. பிரதமரும் இங்கே வரும் போது க்ரீன் சிக்னல் கொடுப்பாரா என்றும் தெரியவில்லை. அதை அவர் தான் முடிவு செய்வார். ஆனால் தற்போது வரை ரெட் சிக்னலும் விழவில்லை, க்ரீன் சிக்னலும் விழவில்லை. இரவு 7.30மணிக்குத்தான் என்ன நடக்கும் என்பது தெரியவரும் என்கின்றனர்.
அப்படியே சந்திக்கும் பட்சத்தில் இருவரையும் ஒன்றாகச் சந்திப்பாரா, இல்லை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடியை மட்டும் சந்திப்பாரா அல்லது பன்னீரை மட்டும் சந்திப்பாரா என பல கேள்விகள் எழுகின்றன. இவை அனைத்துக்கும் விடை இன்று இரவு நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்குப் பின்னர் தான் விடை கிடைக்கும். போட்டி முடிவடையும் 7.30 மணியை எதிர்நோக்கி எடப்பாடி பழனிசாமி, பன்னீர் ஆதரவாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரமும் காத்திருக்கிறது.
பிரியா