அதிமுகவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டால், அதுகுறித்து கலந்து பேசி முடிவை அறிவிப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் வரும் அக்டோபர் 2-ம் தேதி மது ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அதிமுக, விஜய்யின் தவெக உட்பட அனைத்துக் கட்சியினரும் கலந்துகொள்ளலாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இதில் மத, சாதியவாத அரசியலை முன்னெடுக்கும் பா.ஜ.க., பா.ம.க கட்சிகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்ததும், அதிமுக பங்கேற்கலாம் என்று திருமாவளவன் கூறியதுசர்ச்சையை ஏற்படுத்தியதோடு, இந்த மாநாடு வி.சி.க தேர்தல் கூட்டணிக்கான தொடக்கமா என்று பேச்சு எழுந்தது.
திமுக பங்கேற்கிறது!
இந்த நிலையில், மாநாட்டையும் தேர்தல் கூட்டணியையும் முடிச்சுப்போட வேண்டாம் என கோரிக்கை வைத்த திருமாவளவன், அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த 16ஆம் தேதி சந்தித்து மது ஒழிப்பைக் கொண்டு வருவதற்கான கோரிக்கையை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விசிக – திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும், திமுக சார்பில் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க, விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமா என்ற கேள்வி அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
ஒத்த கருத்துடைய கட்சிகள் கூட்டணிக்கு வரவேண்டும்!
இதுகுறித்து கள்ளக்குறிச்சியில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ”அதிமுகவைப் பொறுத்தவரையில் திமுக தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நல்ல மனமுடையவர்கள், எங்கள் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக்கொள்வோம். அவர்களோடு சேர்ந்து அதிமுக சிறந்த ஆட்சியைக் கொடுக்கும்” என்றார்.
மேலும் அவர், “அதிமுகவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டால், மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கம் விலை இன்று சரிந்ததா அல்லது உயர்ந்ததா?
துணை முதல்வர் உதயநிதி… இன்று அறிவிப்பு?