அதிமுக பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் இரு கட்சியின் கூட்டணி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதன்பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், `கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்களை சந்திக்கும் நிகழ்வுகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பொதுச்செயலாளரை முடிவு செய்வது தொடர்பாக விவாதிக்கவில்லை` என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், `எடப்பாடி பழனிசாமியின் உருவ படத்தை எரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அதற்கு எங்களுடைய கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறோம். பாஜக இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்தக் கூடாது. யார் யார் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இனி இதுபோன்று நடக்காதவாறு பாஜக பார்த்துக் கொள்ள வேண்டும்` என்றார்.
மா.செ.க்கள் கூட்டத்தில் அதிமுக – பாஜக மோதல் குறித்து விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, `அதற்கு அவசியமில்லையே. என்ன மோதல் இருக்கிறது. ஒரு மோதலும் கிடையாது. ஐடி விங்கில் இருந்து சில பக்குவப்படாதவர்கள் பேசியிருப்பார்கள். தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி தொடரும்` என்று கூறினார்.
ஜெயலலிதாவை விட என் மனைவி ஆயிரம் மடங்கு பவர்ஃபுல் என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, `எங்கள் தலைவருக்கு நிகரானவர் யாரும் இல்லை. அவருடைய மனைவியை உயர்த்திப் பேசுவது அண்ணாமலையின் தனிப்பட்ட கருத்து’ என்றார்.
ஈரோடு கிழக்கில் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை நீக்கியது தொடர்பாக பேசிய ஜெயக்குமார், ஓபிஎஸிடம் கட்சி இல்லை. அவர் கடையை நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும் போது அவர் எப்படி கட்சியை விட்டு நீக்க முடியும். தற்போது 99 சதவிகித நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொளோம் என தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவதில் ஒரு சிக்கலும் இல்லை, சரியான நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய ஜெயக்குமார், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் செயல்பாடு இருக்கிறது. அது சட்டவிரோதமாகும். அவர் அதிமுக லெட்டர்பேடு பயன்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பிரியா
எடப்பாடியுடன் இணைந்த ஓபிஎஸ் வேட்பாளர்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்: ஆளுநருக்கு எதிர்ப்பு!