தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா சேர்க்கப்பட்டு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
2021 மே 7ஆம் தேதி அமைந்த மு. க. ஸ்டாலின் அரசாங்கத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி ஏற்ற ஆவடி நாசர் இந்த இரண்டு வருடங்களில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
ஆவின் நிர்வாக சர்ச்சைகள் ஒரு பக்கம் என்றால், ஆவடி மாநகர செயலாளராக இருந்த அவரது மகனின் செயல்பாடுகள் அப்பகுதி திமுகவினரிடையிலும் கூட்டணி கட்சியினரிடையிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின. குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் தங்களது தொழிலில் ஆவடி நாசர் குடும்பத்தினரின் தலையீடு கடுமையாக இருப்பதாக தலைமைக்கு புகார் தெரிவித்தனர். மேலும் கட்சியினரையே செல்லமாக கல் எடுத்து அடித்த ஆவடி நாசரின் வீடியோ வைரலாக பரவியது.
இந்த நிலையில் பதவிப்பறிப்பு நடவடிக்கைக்கு உள்ளான ஆவடி நாசரின் ஆதரவாளர்கள்… ” மற்ற அமைச்சர்கள் செய்யாத எந்த தவறை நாசர் செய்து விட்டார்? நாசர் மீது சொல்லப்படும் புகார்கள் எல்லாம் மற்ற அமைச்சர்கள் மீதும் சொல்லப்படுகின்றன. ஆனால் நாசர் மீது மட்டும் ஏன் இந்த நடவடிக்கை?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுகுறித்து திருவள்ளூர் திமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.
“ஆவடி நாசர் திடீரென திமுகவில் முளைத்து வந்தவர் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு நாசரின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது ஆவடி நாசரின் சீனியாரிட்டியை ஆவணப்படுத்தினார்.
1980 களில் திமுக இளைஞரணியில் தனது பயணத்தைத் தொடங்கியவர் நாசர். இப்போது நடக்கும் திராவிட மாடல் பாசறைக் கூட்டங்களுக்கு முன்னோடியாக அப்போது பாசறைக் கூட்டங்கள் என்ற பெயரில் நடத்தியது திமுக இளைஞரணி. அதை சிறப்பாக நடத்தியவர் ஆவடி நாசர்.
1990களில் திமுக இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார். அப்போது ஸ்டாலினுடன் எங்கும் செல்லும் உரிமை பெற்ற நிர்வாகியாக நாசர் இருந்தார். நாசரிடம் மனம் விட்டு தனது பல்வேறு எண்ண ஓட்டங்களை ஸ்டாலின் பகிர்ந்து கொண்டுள்ளார். இப்படிப்பட்ட நாசர் மீது ஏன் திடீர் பதவி பறிப்பு நடவடிக்கை என்ற கேள்வி இயல்பானதே.
முதல்வரின் குடும்பத்தினர் திருவள்ளூர் மாவட்டத்தில் பண்ணை வீடு வைத்திருக்கிறார்கள். குறிப்பாக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் திருவள்ளூரில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டு சில ஏக்கர்களில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். பசு மாடுகளையும் நிறைய வளர்த்து வருகிறார் துர்கா ஸ்டாலின்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் முதலமைச்சரின் வீட்டுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகின்றன. உளவுத்துறை மூலம் தான் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற வழிகளை தாண்டி பல்வேறு நபர்கள் மூலமாக முதல்வர் வீட்டுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் நடக்கும் கட்சி ரீதியான ஆட்சி ரீதியான முக்கியத்துவம் வாய்ந்தவை தெரியப்படுத்தப்படுகின்றன.
அதில் முன்பெல்லாம் ஆவின் பால் காலை 5.30, 6 மணிக்கெல்லாம் கிடைத்துவிடும். ஆனால் இப்போது 7 மணியளவில் தான் கிடைக்கிறது. அதோடு வெண்ணெய், நெய் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதுகுறித்தும், நாசரின் துடுக்குத்தனமான பேச்சுகள் குறித்தும் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் ஆவடி நாசர் தனக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் குடும்பத்தை பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாகவும் அது கிச்சன் கேபினட்டை எட்டி விட்டதால்… அந்தக் கோபத்தில் கேபினட்டில் இருந்து நாசர் அகற்றப்பட்டதாகவும் தெரிகிறது.
ஆவடி நாசர் பதவி பறிப்பின் மூலம் இன்னும் ஒரு முக்கியமான மெசேஜையும் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு தெரிவித்திருக்கிறார். அதாவது, ‘ஒரு காலத்தில் ஸ்டாலினுடன் மிக நெருக்கமாக இருந்த அடிப்படையில் எந்த செயல்பாடுகளை செய்தாலும் அதிலிருந்து தப்பித்து விடலாம் என்று அமைச்சர்கள் நினைக்கக் கூடாது’ என்பதுதான் ஆவடி நாசர் பதவி பறிப்பு மூலம் ஸ்டாலின் சொல்லியிருக்கும் மெசேஜ்” என்கிறார்கள்
வேந்தன்
விஏஓ கொலை வழக்கு: விரைந்து விசாரிக்க உத்தரவு!
உதவி இயக்குநர் சிகப்பிக்கு முன்ஜாமீன்!