Why was Adani attacked by Hindenburg?

அதானி தாக்கப்பட்டது ஏன்?

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்  

கிண்டன் பெர்க் என்ற ஒரு நபர் நிறுவனம் அதானி நிறுவன முதலீடுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி நிறுவனங்களின் பங்குகள் விழுந்து அவரின் சொத்து மதிப்பு சரிந்தது. அதில் அதானியும் பிரான்ஸ் நிறுவனமான டோட்டல் நிறுவனமும் இணைந்த அதானி-டோட்டல் எரிவாயு நிறுவனப் பங்குகள்தான் அதிகம் சரிவைச் சந்தித்தன.

தாக்குதலுக்கு உள்ளான பின்பு சி கியூ சி என்னும் அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அதானி நிறுவனத்தில் பல பில்லியன் டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தது. தாக்குதலுக்குப் பின்பு 6.8 டிரில்லியன் ரூபாயாகச் சரிந்த அதானி நிறுவனங்களின் சந்தை மதிப்பு இப்போது 16.9 டிரில்லியன் ரூபாய் மதிப்பு கொண்டதாக மீண்டு எழுந்திருப்பதாக படம் சொல்கிறது.

இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியாத நிலையில் இப்போது பங்குச்சந்தையின் தலைவரே முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக அதே நிறுவனம் செய்தி வெளியிட்டு இந்தியப் பங்குச்சந்தையின் செயல்பாடுகளையே ஐயத்துக்கு உரியதாக மாற்றி இருக்கிறது. அமெரிக்கர்கள் இந்திய நிறுவனத்திலும் பங்குச்சந்தையிலும் மூக்கை நுழைத்து ஆர்வம் காட்ட என்ன காரணம்? இந்திய மூலதன சந்தையில் என்ன நடக்கிறது?

நன்றி மின்ட் 

உக்ரைன் – ரஷ்யப் போரைத் தொடர்ந்து இந்தியா டாலர் அல்லாத பணத்தில் எண்ணெய் வாங்கியதால் ஏற்பட்ட இந்திய-அமெரிக்க-ஐரோப்பிய உரசல் காரணமாக இருக்கலாம் என்று ஊகிப்போமானால் எண்ணெய் வாங்கி கொள்ளை லாபம் ஈட்டும் அம்பானியின் நிறுவனங்கள்தான் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டு உலகவிலக்கம் செய்யப்பட்ட வெனிசுவேலாவின் எண்ணெயை அந்த நிறுவனம் 15 டாலர் அளவுக்கு மலிவாக வாங்க அமெரிக்கா சிறப்பு அனுமதி அளிக்கிறது. எனவே இங்கே பிரச்சினை அதுவல்ல. எனில் அதானி மட்டும் தாக்கப்பட்டதேன்? இப்போது பங்குச்சந்தையின் நிர்வாகம் குறிவைக்கப்படுவதேன்?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்றால் அம்பானி-அதானி-ஒன்றிய கூட்டுக்களவாணித்தனம், ஆர்எஸ்எஸ் பார்ப்பனிய சித்தாந்தம், பாசிச பாஜக எதேச்சதிகார அரசியல், ஒன்றியம் மாநில உரிமைகளைப் பறிப்பது போன்ற வழமையான கலைச்சொற்களைக் கொண்டு உருட்டுவதை விட்டுவிட்டு இந்த அரசு ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் நடந்ததை முதலில் சரமாகத் (abstract) தொகுத்துப் புரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக ஆட்சிக்கு முந்தைய காங்கிரஸ் காலத்தில் வங்கி, நிதி, ஆயுத உற்பத்தி, சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது, அமெரிக்க-இந்திய அணு ஆயுத ஒப்பந்த முயற்சிகள் போராட்டங்களையும் அரசியல் பிளவையும் ஏற்படுத்தின. அம்பானியும் டாட்டாவும் அலைக்கற்றையை அடைவதில் ஏற்பட்ட போட்டி 2ஜி ஊழலாக வெளிப்பட்டது. அதையே மாபெரும் ஊழலாக அசாரே போராட்டம் வழியாக ஊதிப் பெருக்கி முகநூலின் வழியாக புரட்சியாக ஒளிபரப்பி குஜராத் பொருளாதார வளர்ச்சி பிம்பத்தைக் கட்டமைத்து மோடியை நாயகனாக்கி பாஜகவை ஆட்சியில் அமர வைத்தார்கள்.

காங்கிரஸ் அந்நிய முதலீடுகளுக்கு பாதி(<50%) அனுமதி அளித்தது. இவர்கள் வந்த பிறகு நூறு விழுக்காடு முதலீடுகளுக்கும், சில்லறை வணிகத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. பொதுத்துறை வங்கிகள், காப்பீடு நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்து அவற்றின் சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றின. பணமதிப்பிழப்பு, ஒரே நாடு ஒரே வரி முறைக்குப் பிறகு சிறு குறு நிறுவனங்கள் குறைந்து உற்பத்தி பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தொலைத்தொடர்பில் பொதுத்துறை மற்றும் பல தனியார் நிறுவனங்கள் ஒழிக்கப்பட்டு அம்பானி, மிட்டல், பிர்லாவிடம் சென்றது. இந்தத் துறையில் சீனர்களின் உள்கட்டமைப்பு, வணிகம் ஒழிக்கப்பட்டு அமெரிக்க நிறுவனங்கள் ஏகபோகம் பெற்றன.

பொதுத்துறை ஆதிக்கம் செலுத்திய நிலக்கரி வழியான மின்சார உற்பத்தி, துறைமுகம், விமானத்தளம் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து உள்கட்டமைப்புகளை அதானி கைப்பற்றி இருக்கிறார். சிமென்ட், சமையல் எண்ணெய் உற்பத்தியில் ஏகபோகம் பெற்று இருக்கிறார். புதிய மின்சார உற்பத்திக்கான சூரிய மின்னாற்றல் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்துகிறார். நண்பரைக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்களை மலிவான விலையில் பொதுத்துறை வங்கிகளில் குறைவான வட்டிக் கடனில் கைப்பற்றி அந்தக் கடனையும் பின்னர் தள்ளுபடி செய்ய வைத்திருக்கிறார். பின்னர், அதே சொத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட்டு சொந்த ஆட்களைக் கொண்டும் உள்ளூர் அரச, தனியார் முதலீட்டாளர்களைக் கொண்டும் தனது பங்குக்கு கிராக்கியை ஏற்படுத்தி செயற்கையாக விலையை உயர்த்தி உலகப் பணக்காரர் ஆகி இருக்கிறார்.

இவரின் வளர்ச்சியுடன் ஒன்றியத்தின் வரி வருவாய் வரலாறு காணாத வளர்ச்சி கண்டிருக்கிறது. இவர்களின் வருமானமும் சொத்து மதிப்பும் ஏற ஏற பொருள்களின் விலைகூடி நமது வருமானம் குறைந்து நாம் கடனாளி ஆகி இருக்கிறோம். ஒன்றியத்தின் அந்த வருவாயை இப்போது பல பில்லியன் ஊக்கத்தொகையாகப் பெற்று பொருள் உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கான சில்லுகள் உள்ளிட்ட கருவிகளின் உற்பத்தியை டாட்டா, அதானி ஆகியோர் தொடங்க இருக்கிறார்கள். மக்கள் பணத்தில் உருவான பொதுத்துறை சொத்துகளை மக்கள் பணத்தைக் கொண்டே வாங்கியது போதாமல் புதிய தொழிற்துறை உற்பத்தியையும் மக்களின் உழைப்பைக் கொண்டே உருவாக்கிக் கொள்கிறார்கள். அடடா.. என்ன ஒரு ராஜதந்திரம்.

Why was Adani attacked by Hindenburg?

இப்படிப் பத்தாண்டுகளில் நடந்ததைச் சாரமாகப் பார்த்தால் வங்கி, காப்பீடு உள்ளிட்ட ரூபாய் நிதி மூலதனத்தை அந்நிய மூலதனம் பதிலீடு செய்கிறது. ரூபாய் மூலதனத்தின் வழியான உற்பத்தி அந்நிய மூலதனத்தின் வழியான உற்பத்தியாக மாற்றமடைகிறது. மக்களுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்த உற்பத்திக்கும் சந்தைப் பரிவர்த்தனைக்கும் இன்றியமையாத எரிபொருள், மின்சாரம், துறைமுக போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மக்களின் பணத்தைக் கொண்டே அதானி தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.

பரிவர்த்தனைக்கான நவீன கால தகவல் தொடர்பு சாதனமான இணையத்தை அம்பானி கைப்பற்றி இருக்கிறார். உற்பத்தியாகும் பொருள்களை பொதுத்துறை உள்கட்டமைப்புகளைக் கொண்டு வாங்கி விற்று வந்த உள்ளூர் வணிகர்களை நவீன உள்கட்டமைப்புகளைக் கொண்ட ஜியோ, அமேசான், வால்மார்ட் நிறுவனங்கள் பதிலீடு செய்திருக்கின்றன. சுருக்கமாக, ரூபாய் மூலதனத்தை அந்நிய மூலதனமும், அது உருவாக்கிய பொதுத்துறை சொத்துகளை தனியாரும், ரூபாய் மூலம் நடந்த பொருள் உற்பத்தியும் பரிவர்த்தனையும் அந்நிய மூலதனத்தின் வழியாக நடைபெறுவதாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது.

சரி இதற்கும் அதானி தாக்கப்பட்டதற்கும் என்ன தொடர்பு? என்றுதானே கேட்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள் காரணம் இருக்கிறது.

கொரோனா சமயத்தில் உள்ளே நுழைந்த பல பில்லியன் டாலர் அந்நிய முதலீட்டில் பெரும்பகுதி அம்பானியின் நிறுவனங்களுக்குச் சென்றது. அவரின் சொத்தை ஏற்கனவே அந்நிய மூலதனம் வாங்கிவிட்டது. ஏன் அவர்களுக்கு சொத்தை விற்க அம்பானி முன்வந்தார் என்று கேட்டால் இதற்கு முந்தைய அம்பானியின் எண்ணெய் வணிகம் டாலர் வழியாகத்தான் நடக்க வேண்டும். இப்போதைய இணையம், தரவுகள், இணையவழி வணிகம் என எந்தத் தொழில்நுட்பமும் அவரிடம் இல்லை. அவற்றை எல்லாம் அமெரிக்க நிறுவனங்களிடம்தான் அவர் வாங்க வேண்டும். எனவே, கடனாக டாலர் மூலதனத்தைக் கொண்டு அவர்களின் தொழில்நுட்பத்தை வாங்கினார்.

அம்பானி மாப்பிள்ளையின் பணக்கார சட்டை அவருடையதுதான் என்றாலும் அந்த சொத்துடலின் பல பாகங்கள் மற்ற பணக்காரர்களுக்கு சொந்தமானது. இதன்மூலம் உற்பத்திக்கான மூலதனம், நிதி, எரிபொருள் சந்தைப்படுத்துவதற்கான இணையம், இணையதளம் உள்ளிட்ட தொலைத்தொடர்பு என அனைத்தும் அப்போது அந்நிய மூலதனத்தின்கீழ் வந்து பொருள்களின் விலையைத் தீர்மானிக்கும் ஏகபோகத்தை அவர்கள் எட்டினார்கள். இதில் விடுபட்டு நின்றது அதானியின் சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட உள்கட்டமைப்புகள்.

Why was Adani attacked by Hindenburg?

நன்றி மின்ட்

அம்பானியைப் போன்று மக்கள் சொத்தை வாங்க அதானிக்கு டாலர் எதற்கு? சொத்தைச் சட்டப்படி வாங்கி கடனை அடைத்ததைப் போன்று கணக்கு காட்டினால் போதுமானது. அதற்கான அரசு அதிகாரமும் நிர்வாகமும் பொதுத்துறை வங்கிகளும் இருந்த நிலையில் அதைத்தான் செய்து இருக்கிறார் என்பதைப் படம் காட்டுகிறது. இரண்டாயிரத்துப் பதினாறாம் ஆண்டு வரை உள்ளூர் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அதானி வாங்கிய கடனின் அளவு 86 விழுக்காடாக இருந்தது. அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்துக்கு வெளியில் இருந்த இவரின் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு அவர்களின் கண்ணை உறுத்தி இருக்கிறது. போதாக்குறைக்கு உற்பத்திக்கான எரிவாயு இறக்குமதி வணிகத்தை ஐரோப்பிய நிறுவனமான டோட்டல் நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட போட்டிக்கு நின்றதும் தாக்குதலுக்குக் கூடுதல் காரணமாகி இருக்கலாம். இதில் முக்கியமானது அதானியின் சொத்தும் அதன் மதிப்பும் ரூபாயை மையமாகக் கொண்டிருந்ததுதான் அவர் மீதான தாக்குதலுக்குக் காரணம் என்று தெரியவருகிறது.

தாக்குதலுக்குப் பிறகு அதானியின் உள்ளூர் வங்கிக்கடன் 15 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. அந்த இடத்தைப் பெருமளவு அந்நிய மூலதனம் பதிலீடு செய்திருக்கிறது. அதானி மக்கள் பணத்தைக் கொண்டே மக்கள் சொத்தைக் கைப்பற்றி பங்குச்சந்தை விளையாட்டின் வழியாக உயர்த்திய மதிப்பை முதலில் தாக்கி விழவைத்த அமெரிக்கர்கள் மலிவான விலையில் அதனைக் கைப்பற்றி பின்பு மீண்டும் அதன் மதிப்பை உயர்த்த அனுமதித்து, பெரு லாபம் பார்த்திருக்கிறார்கள். அதாவது கொள்ளையில் தனக்கான பங்கை மிரட்டி பெற்று இருக்கிறார்கள்.

இதன்மூலம் தொழிற்துறை உற்பத்திக்கான மூலதனம், நிதி, தொழில்நுட்பம், எரிபொருள், போக்குவரத்து உள்கட்டமைப்புகள் என அனைத்தையும் டாலர் மூலதனம் தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறது. பொருள்களின் விலைகளைத் தீர்மானிக்கும் ஏகபோக வலிமையைப் பெற்று இருக்கிறது. உயரும் விலையில் வரும் லாபத்தில் தனக்கான பங்கை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்படி உருவாகும் சொத்தின் மதிப்பைத் தீர்மானிக்கும் இடமான பங்குச்சந்தை மட்டும் இப்போது எஞ்சி நிற்கிறது. பங்குச்சந்தையின் தலைமையைக் குறிவைத்து இருப்பதன் மூலம் அதற்கான வேலை தொடங்கி இருக்கிறது.

நமது குடும்பங்களோ நாளுக்கு நாள் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. மாதம் தொடங்கினால் கடன் தவணை கட்டும் நெருக்கடி கழுத்தை நெரிக்கிறது. இதற்கும் பொதுத்துறை உள்கட்டமைப்பு, அம்பானி அதானி கொள்ளை, அந்நிய முதலீடு, உற்பத்தி மாற்றம், விலைவாசி உயர்வு, சொத்து மதிப்புக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தேடி காரணத்தைக் கண்டறியும் ஆர்வம் இருக்கிறது. அந்த நூறு ஆண்டு பொருளாதார மாற்ற கதையைக் கேட்க உங்களுக்குத்தான் பொறுமை இல்லை.

கட்டுரையாளர் குறிப்பு 

பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – உத்திராடம்! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

டிஜிட்டல் திண்ணை: செப்டம்பர் 20 வெள்ளி… உதயநிதி உயர்வுக்கு தேதி குறித்த பின்னணி!

ஏலியன் மாதா கி ஜே… அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
5
+1
2
+1
0
+1
0

1 thought on “அதானி தாக்கப்பட்டது ஏன்?

  1. பொதுத்துறை நிறுவனங்களை அரசே நடத்த விட்டு ஒட்டு மொத்த இந்தியாவை படுபாதாளத்தில் தள்ளுவது தான் பல பேருடைய உண்டியல் கனவு..
    11 வது இடத்தில் உலக பொருளாதாரத்தில் இருந்த இந்தியா 5 வது இடத்திற்கு வந்ததில் இருந்து தான் ஒட்டு மொத்த உலக எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளாகிறது…இதையும் மீறி 3 வது இடத்தை விரைவில் அடையும்..
    நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரமும்,தேச பாதுகாப்பும் தான்..அதில் தேச மக்களின் பங்கும் அவசியம்…தவிர சீன
    உண்டியல் குலுக்கிகள் கரிசனமும் பச்சாதாபமும், ரத்தம் குடிக்க விழையும் குள்ள நரி கூட்டத்தோட கூப்பாடுகளும் எட்டி உதைத்து இந்தியா முன்னேறும்…
    என்ற எண்ணமே ஒவ்வொரு இந்தியனின் அவசியம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *