ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன்? அன்புமணி கேள்வி!

Published On:

| By Selvam

பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் உடனே அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆள்தேர்வு அறிக்கை நடப்பாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்த நிலையில், மூன்று மாதங்கள் நிறைவடைந்தும் இன்று வரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

அரசு ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தாமதம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த டிசம்பர் இறுதியில் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4,000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல், வட்டாரக் கல்வி அலுவலர்கள் 23 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை பிப்ரவரி மாதமும், 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான காலம் கடந்தும் இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை. அதற்கான காரணமும் தெரியவில்லை.

அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவை கடந்த சில ஆண்டுகளாகவே நிரப்பப்படாததால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆண்டுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தால் தான் பிப்ரவரி மாதத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் போட்டித்தேர்வை நடத்த முடியும்.

அவ்வாறு நடத்தினால் தான் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதற்குள்ளாக உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த முடியும். ஆனால், அறிக்கை வெளியிடப்படாததால், வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் உதவிப் பேராசிரியர்களை அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வு அறிக்கை மார்ச் மாதம் வெளியிடப்படாததால் அவர்களை பணியமர்த்துவதும் தாமதம் ஆகக்கூடும். ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட வேண்டிய பட்டதாரி ஆசிரியர் பணிக்கான அறிக்கையும் வெளியாகுமா? என்பதும் உறுதியாக தெரியவில்லை.

ஆசிரியர்கள் பணியமர்த்தலில் ஏற்படும் தாமதத்திற்கும், குழப்பங்களுக்கும் காரணம் ஆசிரியர் தேர்வு வாரியம் செயலிழந்து கிடப்பது தான். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு இணையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை வலுப்படுத்துவதற்காக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அத்தகைய சீரமைப்புப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் பதவி கடந்த அக்டோபர் மாதம் முதல் 6 மாதங்களாக காலியாக கிடக்கும் நிலையில், அந்த இடத்திற்கு முழு நேரத் தலைவர் கூட அமர்த்தப்படவில்லை. அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் முடங்கிக் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளும், கல்லூரிகளும் மேம்பட வேண்டும்; கல்வித்தரம் உயர வேண்டும் என்றால் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யும் வகையில், அரசு பள்ளிகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

ராஜ்

இன்ஸ்டாகிராமில் விஜய்: குவியும் ஃபாலோயெர்ஸ் !

சஹால் சுழலில் சிக்கிய ஐதராபாத்! அபார வெற்றி பெற்ற ராஜஸ்தான்!

சூரிக்கு இன்னொரு பிறப்பு: ‘விடுதலை’ முதல் நாள் பற்றி சிலிர்க்கும் இரா.சரவணன்

Why the delay in the appointment of teachers
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share