ஒரு தொகுதிக்கு 28 ஆயிரம் ஓட்டுகள் அதிகரிக்கும் அபாயம்: தேர்தல் ஆணையத்தின் தரவு விளையாட்டு- காங்கிரஸ் கேள்வி!

அரசியல்

வாக்குப்பதிவு தொடர்பான தரவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏன் ஏற்படுகிறது என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் செய்தி மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேரா இன்று (மே 22) கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. வாக்குப்பதிவு நிறைவடைந்த பகுதிகளில் பதிவான வாக்குகளின் சதவீதம் சென்ற  தேர்தல்களில்,  தேர்தல் ஆணையத்தால் வாக்குப்பதிவு நடைபெற்ற அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெளியிடப்பட்டது.

ஆனால், இந்த வருடம் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், அதற்கான தரவுகள் 11 நாட்களுக்கு பிறகும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த 4 நாட்களுக்குப் பிறகும், 3 மற்றும் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து முறையே 4, 8 நாட்களுக்கு பிறகே தரவுகள் வெளியிடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், இதுத்தொடர்பாக  காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், “ஒரு தொகுதி, மாநிலம் அல்லது தேர்தலின் ஒரு கட்டத்தின் தனிப்பட்ட வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட ஆணையத்துக்கு சட்டப்பூர்வமாக அவசியம் இல்லை” என விளக்கம் அளித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத்துறை தலைவர் பவன் கேராவும் தேர்தல் ஆணையத்திற்கு வாக்குப்பதிவு தரவுகள் குறித்து இன்று (மே 22)  கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுத்தொடர்பாக, பவன் கேரா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு குறித்த இறுதி விவரங்களை 10 முதல் 11 நாட்கள் தாமதமாக வெளியிடுகிறது. தேர்தல் வாக்குப்பதிவு குறித்த இறுதி விவரங்களை 24 மணிநேரத்திற்குள் அறிவிக்கும் நடைமுறையே இதற்கு முன்னர் இருந்து வந்தது.

மேலும், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் போது இருக்கும் வாக்காளர் தரவுகளுக்கும், இறுதியாக வெளியிடப்படும் வாக்காளர் எண்ணிக்கைக்கும் இடையே 1.7 கோடி வாக்குகள் வரை வித்தியாசங்கள் உள்ளன. இதைப்போன்று முன்பு எப்போதும் நடைபெற்றதில்லை.

நடந்து முடிந்த 4 கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகளில், தேர்தல் ஆணையத்தின் இத்தகைய விசித்திரமான நடவடிக்கைகளின் மூலம் வாக்காளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

மேலும், காணாமல்போன வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தக் கேள்விக்கும் தற்போது வரை எந்த பதிலும் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது.

வாக்குப்பதிவு நடைபெறும்போது இருக்கும் தரவிற்கும், இறுதியாக வெளியிடப்படும் தரவிற்கும் இடையே 1.7 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கை வித்தியாசங்கள் என்பது மிகப்பெரியதாகும். இதன் வாயிலாக ஒரு மக்களவைத் தொகுதியில் 28,000 வாக்குகள் வரை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

இதன்படி, பாஜக அதிகமாக இந்த தொகுதிகளில் தோற்கும் என்று கணிக்கப்பட்ட மாநிலங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் அதிகமாக உள்ளன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் கவலையளிக்கிறது” என பவன் கேரா தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’வடக்கன்’ தலைப்புக்கு தடைபோட்ட சென்சார் போர்டு… இதுவரை சிக்கலை சந்தித்த அரசியல் படங்கள்!

குற்றால வெள்ளம்: “வீடியோ எடுக்காம காப்பாத்துங்க” பாடம் எடுத்த சிறுமி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *