மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தான் ராஜினாமா முடிவு எடுத்தது பற்றி பேசியுள்ளார்.
இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த இரு மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 29, 30 ஆகிய நாட்களில் மணிப்பூர் மக்களை சந்தித்து ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 30ஆம் தேதி இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று முதல்வர் பைரன் சிங் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்க இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கிளம்பினார்.
ஆனால், அவரது ஆதரவாளர்களும், மணிப்பூர் பெண்களும் எதிர்ப்புத் தெரிவித்து பைரன் சிங் வீடு முன்பும், ராஜ் பவன் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தனது முடிவை மாற்றிக்கொண்ட பைரன் சிங், மீண்டும் தனது இல்லத்துக்குள் சென்றார்.
இந்நிலையில் தனது ராஜினாமா முடிவு குறித்து என்.டி.டி.விடம் பேசியுள்ள பைரன் சிங், “பிரதமர் மோடிக்கு எதிராக நடந்த போராட்டங்களால் மனதளவில் காயமடைந்தேன். இந்த இரண்டு மாத காலத்தில் நான் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக உணர்ந்தேன். எனவே மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ராஜினாமா முடிவுக்கு வந்தேன்.
ஆனால் என் வீட்டுக்கு முன்னால் இத்தனை பேர் குவிவார்கள் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் என்னைவிட்டுப் போய்விட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் வெளியே வந்து பார்த்த போது அப்படி இல்லை என்று தெரியவந்தது. அப்போது கடவுளுக்கும் என் மக்களுக்கும் நன்றி தெரிவித்தேன்” என்றார்.
மேலும் அவர், “இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நமது தலைவர்களின் புகைப்படங்களை எரிக்க ஆரம்பித்துவிட்டனர். எனது படத்தை எரித்திருந்தால் கூட பரவாயில்லை. பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தனர். சில இடங்களில் பாஜக அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன்” என்று கூறியுள்ளார்.
பிரியா
மனக்கவலைக்கு ‘பார்ட்னர்’ மருந்தாகும் : நடிகர் ஆதி
வெ.இறையன்பு: ஐஏஎஸ் பதவிக்கு ஓர் இலக்கண இலக்கியம்!