தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்காதது தகவல் தொடர்பு பிரச்சனையால் தான் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 10) சென்னை அண்ணா சதுக்கத்தில் கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நவீன மயமாக்கப்பட்ட பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காகத் தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த இடத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்பீட்டில் நவீன கழிவறை கட்டப்பட உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் மூலம் மக்கள் அதிகம் பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் கழிவறை பயன்பாட்டில் இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதனால் அந்த கழிவறைகள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற கேள்விக்கு,
“அதற்கான பணிகளை நான் நேரில் சென்று பார்வையிட்டு விரைவில் பயன்பாட்டிற்கு வருதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
பின்னர் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறித்த கேள்விக்கு,
“கொரோனா தொற்று காரணமாகத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறவில்லை. இது ஒரு தகவல் தொடர்பு பிரச்சனை தான்.
இது போன்று அடுத்து நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்து அனுப்பாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில்,
கடந்த மே மாதம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் விட்டதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என தகவல்கள் வெளியானது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
அமித் ஷாவை சந்திக்க அழைப்பு: சிவகார்த்திகேயன், விஷால் தவிர்ப்பு!
ஸ்டாலின்-வானதி சீனிவாசன் ஜப்பான் சீக்ரெட்: அண்ணாமலை அவசர புகார்!
’ஹாய் அபிராமி’: நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து ஆரத்தழுவிய யானைகள்!