ஒடிசா சென்ற தமிழக அமைச்சர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்லாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த மூத்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்தநாளை முன்னிட்டு திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (ஜூன் 5) அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு போதை மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கஞ்சா, கள்ளச்சாராயம் அதிகரித்துள்ளது. விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தி வரும் அளவிற்கு தமிழ்நாடு போதை வசதி உள்ள ஒரு தளமாக இருக்கிறது. மதுரை தஞ்சாவூரில் டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்தவர்கள் இறந்துள்ளார்கள்.
அரசு மதுபான கடையிலே மது வாங்கி குடிப்பதற்கு அச்சம் தருகின்ற ஒரு நிலைமை இருக்கின்றது. மதுபானத்தில் கலப்படம், கள்ளச்சாராய மரணங்கள், டாஸ்மாக் சரக்கை வாங்கி குடித்தவர்கள் இறந்து போகும் ஒரு நிலைமை இன்றைக்கு இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க திமுக தான் பொறுப்பேற்க வேண்டும். இது போன்ற ஒரு நிலைமை நாட்டில் எங்கேயும் கிடையாது.
ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கிய ஒரு துயரமான சம்பவம். இதனை ரயில்வே மற்றும் சிபிஐ விசாரிக்கிறது. விசாரணை அறிக்கை வந்தால் தான் இது குறித்துப் பேச முடியும். மற்றொரு விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இருந்து ஒரு குழு சென்றது. அவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தார்களா?. ஒரு முதல்வரின் மகன் பிரதமர் வருகிறார் என்பதால் செல்லவில்லை என சொல்வது சரியா?
ஏதோ சுற்றுலா செல்வது போல கூலிங் கிளாஸ் போட்டு கொண்டு செல்கிறார். இதில் கூலிங் கிளாஸ் போடுவது தப்பில்லை. ஆனால் ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது இது தேவையில்லாத விஷயம். ஏதோ ஷூட்டிங் செல்வது போல சுற்றுலா சென்று வந்துள்ளார்.
முன்பதிவு பெட்டிகளில் இருப்பவர்கள் தகவல் கிடைத்துள்ளது. அதை வைத்து கணக்கு சொல்கிறார்கள். ஆனால் முன்பதிவில்லா பெட்டிகளில் எத்தனை பேர் பயணித்தார்கள் என்று இன்னும் தெரியவில்லை. இன்னும் 170 சடலங்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இறந்திருக்க கூடாது என்று தான் எல்லோரும் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஆனால் அதை உறுதிப்படுத்த வேண்டியது யார்? அனைத்தையும் முழுவதுமாக விசாரித்து பகுப்பாய்வு செய்து ஒட்டுமொத்தமாக அறிக்கை கொடுக்காமல், முந்திரி கொட்ட மாதிரி விமான நிலையத்தில் வந்து இன்னும் 5 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. ஆனால் யாருக்கும் எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று சொல்கிறார்கள்.
ரயிலில் தமிழர்கள் எத்தனை பேர் பயணித்தார்கள், அதில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், வீடு திரும்பியுள்ளார்கள், சிகிச்சை பெற்று வருகிறார்கள், எத்தனை பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற பெயர் பட்டியலை அரசு சார்பில் இணையத்தில் ஏன் வெளியிடவில்லை. அதை செய்யாமல் கூலிங் கிளாஸ் உடன் சுற்றுலா சென்று வந்துள்ளனர்” என்றார்.
மோனிஷா
வெயில் தாக்கம்: பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்!
ஒடிசா ரயில் விபத்து: பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!