பிடிஆர் ஆடியோ குறித்து முதலமைச்சர் பதிலளிக்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏப்ரல் 19-ஆம் தேதி உதயநிதி, சபரீசன் ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை சேர்த்துவிட்டனர் என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக 28 நொடிகள் கொண்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த ஆடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு டிஎம்கே ஃபைல்ஸ் குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த ஆடியோ உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
பிடிஆர் ஆடியோ மீது நடவடிக்கை எடுத்து உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த ஆடியோ நேர்மையற்ற சிலரால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்று பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்திருந்தார்.
தொடர்ச்சியாக பிடிஆர் டேப் 2 என்ற பெயரில் கடந்த 25ஆம் தேதி பிடிஆர் பேசுவதாக மற்றொரு ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 27) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நிதியமைச்சர் பேசியதாக ஒரு ஆடியோ வெளிவந்துள்ளது. இது குறித்து ஏன் யாரும் பேசுவதில்லை. இது ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிரச்சனை.
நிதியமைச்சரின் ஆடியோவிற்கு இன்னும் ஏன் முதலமைச்சர் பதில் சொல்லவில்லை. அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர், மருமகன், மகன் மீது இருக்கின்ற குற்றச்சாட்டுக்கு ஏன் பதில் சொல்லவில்லை.
இதை மத்திய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். இது நாட்டின் பிரச்சனை ஒரு மாநிலத்துப் பிரச்சனை கிடையாது.
எனவே இந்த 30 ஆயிரம் கோடி பிரச்சனையை ஆழமாக எடுத்துக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
நாங்கள் எங்கு சென்றாலும் நல்ல ஆட்சியைக் கொடுத்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 2 ஆண்டிலேயே திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு வந்துவிட்டது.
திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியைப் பொறுத்தவரை இது பொதுக்குழு எடுத்த முடிவு.
பொதுக்குழு எடுக்கின்ற முடிவிற்குத் தான் அனைவரும் கட்டுப்பட்டு நடக்கிறோம்” என்று பேசினார்.
மோனிஷா
சூடானில் இருந்து 9 தமிழர்கள் உட்பட 1,100 இந்தியர்கள் மீட்பு!
”இலங்கை பிரதமர் சீமான்”: இணையத்தை கலக்கும் ’அடியே’ மோஷன் போஸ்டர்!