புதிய நாடாளுமன்றம்: கொண்டாடுகிறேன் குடியரசுத் தலைவரோடு…குழப்பும் கமல்

அரசியல்

பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நமது புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தினை நாளை (மே28) பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்தன.

ஆனால் மத்திய அரசு அதை பரிசீலனை கூட செய்யாத நிலையில் இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று 20 எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில், குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று கமல் ஹாசன் இன்று(மே27) கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”நாளை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. இது முழு நாட்டிற்கும் கொண்டாட்ட தருணம். இதை நானும் மிகப் பெருமையான தருணமாக கருதுகிறேன். இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அரசை வாழ்த்துகிறேன்.

தேசிய நலன் கருதி, புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் நானும் கொண்டாடுகிறேன். அதே சமயம் இந்தியாவின் குடியரசுத் தலைவர், எதிர்கட்சிகளும் இந்த விழாவில் கலந்துக்கொள்ளும் வகையில் திட்டமிடாத விதத்தில் உங்களுடன் கருத்துவேறுபாடு கொள்கிறேன்.

தேசப் பெருமிதத்தின் இந்த தருணம் அரசியல் ரீதியாக பிளவுபட்டிருக்கிறது. என்னுடைய பிரதமரிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். நமது புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை தயவுசெய்து நாட்டுக்கு சொல்லுங்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஏன் பங்கேற்கக் கூடாது என்பதற்கான காரணம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் அனைத்துக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால்தான் நாட்டின் சட்டமாகும். மேலும், நாடாளுமன்றத்தின் அமர்வுகளை கூட்டவோ அல்லது ஒத்திவைக்கவோ இந்தியாவின் முதல் குடிமகளான திரவுபதி முர்முவுக்கு அதிகாரம் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டிற்கு இன்றியமையாதவர். எனவே சமரசம் செய்து, குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு அழைக்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறேன். புதிய நாடாளுமன்றம் சாதாரண கட்டடமல்ல.காலங்காலமாக இந்திய ஜனநாயகத்தின் இல்லமாக இது இருக்கும்.

எனவே, வரலாற்றில் பெரும் பிழையாகப் பதியப்படும் இந்தக் குறையை திருத்திக் கொள்ளுமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குடியரசின் புதிய வீட்டில் அதன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசிக்க வேண்டும். கூட்டு ஜனநாயகத்தை நான் நம்புகிறேன், எனவே இந்த நிகழ்வைப் புறக்கணிக்க முடிவெடுத்திருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இந்த நிகழ்வின் மீது உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் பொது மன்றங்களிலும், புதிய நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பலாம். எனவே இதை அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன், நம்மைப் பிரிப்பதை விட நம்மை ஒன்றிணைப்பதே அவசியம்.

முழு நாடும் இந்த நிகழ்வை எதிர்நோக்கியிருக்கிறது, உலகத்தின் கண்கள் நம்மீது இருக்கிறது புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை தேசிய ஒருமைப்பாட்டின் சந்தர்ப்பமாக மாற்றுவோம். நமது அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒருநாள் தள்ளிவைப்போம்” என்று கூறியுள்ளார் கமல் ஹாசன்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஐ.டி. ரெய்டு: ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2.1 கோடி பறிமுதல்?

மோடி தலைமையில் நிதி ஆயோக்:  ஆந்திரா தவிர  தென்னிந்திய முதல்வர்கள் ஆப்சென்ட்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *