டிஜிட்டல் திண்ணை: அமித்ஷாவிடம் காரம்…  ஆளுநரிடம் பரிகாரம்: எடப்பாடி ராஜ்பவன் ரகசியம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் பேஸ்புக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து விட்டு வெளியே செய்தியாளரிடம் பேசிய பிரஸ்மீட் வீடியோ நோட்டிபிகேஷன் வந்தது.

எடப்பாடியின் பிரஸ் மீட் வீடியோவை பார்த்துவிட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

“கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் ஆர்.என். ரவி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளித்தார். அந்த காலகட்டம் ஜூலை 11 பொதுக்குழுவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே தீயாய் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம்.

இந்த சூழலில் ஆளுநர் ரவி அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில் அந்த தேநீர் விருந்தைப் புறக்கணித்தார் எடப்பாடி பழனிச்சாமி. எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டும் அந்த தேநீர் விருந்தில் எடப்பாடி பங்கேற்கவில்லை.

ஆளுநரின் அழைப்பை ஆகஸ்ட் மாதம் புறக்கணித்த எடப்பாடி பழனிச்சாமி, மூன்று மாதங்களில் அதே ஆளுநரிடம் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு நேரம் வாங்கி அவரை சந்தித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் ஆளுநர் தேநீர் விருந்தை எடப்பாடி புறக்கணித்ததன் மூலம் மத்தியில் ஆளும் பாஜக உடனான தனது கசப்புணர்வை முதல் கட்டமாக வெளிப்படுத்தியதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்பட்டது.

why palaniswami meet governor rn ravi speech against amitsha

இந்த நிலையில் அடுத்த செப்டம்பர் மாதமே போராடி  டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி. அதன் பிறகு சென்னை திரும்பியவர் பாஜக உடனான தனது அணுகுமுறையை அதன் பிறகு வேகவேகமாக மாற்றத் தொடங்கினார்.

ஏனெனில் அதிமுகவில் எடப்பாடி, பன்னீர், டிடிவி, சசிகலா என அனைத்து தரப்பினரும் ஒன்றாக இணைந்தால்தான் மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வலிமையாகும், அதன் மூலம் திமுகவை வீழ்த்தலாம் என்று டெல்லியில் எடப்பாடியிடம் சொல்லியிருந்தார் அமித் ஷா. ஆனால் இதை கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்தே ஏற்க மறுத்துவரும் எடப்பாடி, இப்போதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்.

தனது உணர்வை பாஜகவுக்குத் தெரிவிக்கும் வகையில்தான் அதிமுக தலைமையில் தான் மெகா கூட்டணி என்றார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அதிமுகவே தீர்மானிக்கும் என்றார்.

இதன் உச்சகட்டமாக டெல்டாவில் மழை சேதத்தை பார்வையிடச் சென்றபோது மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தவர்… ‘அமித் ஷா எப்போது சென்னை வந்தாலும் அவரை சென்று சந்திக்க வேண்டும் என்று அவசியம் இல்லை’ என வேறு தொனியில் பேசினார்.

இதன் மூலம் அதிமுக பாஜக கூட்டணி அமைய வாய்ப்பில்லை என்றே எடப்பாடி சுற்றி இருந்தவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.  அதிமுகவின் அதிகாரபூர்வமற்ற செய்தி தொடர்பாளராக இல்லாவிட்டாலும் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கூட, ‘பாஜகவை நம்பி அதிமுக இல்லை. அதிமுகவை நம்பிதான் பாஜக இருக்கிறது’ என்று வெளிப்படையாக பேச ஆரம்பித்தனர்.

why palaniswami meet governor rn ravi speech against amitsha

இதற்கிடையில் பாஜகவில் இருந்து எடப்பாடிக்கு தனிப்பட்ட முறையில் சில செய்திகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக கடந்த வாரம் தன்னை சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்தவர்களிடம், ‘நான் மயிலாடுதுறையில் பேசியதை அடிப்படையாக வைத்து பாஜகவை கடுமையாக விமர்சிக்க வேண்டாம்.

பன்னீர் செல்வமும் தினகரனும் சேர்ந்து இரட்டை இலையை முடக்குவதற்கு சதி செய்து வருகிறார்கள். அந்த சதிக்கு பாஜக துணை போய்விடக்கூடாது. எனவே பாஜகவை எந்த நிலையிலும் கடுமையாக விமர்சிக்க வேண்டாம். கூட்டணி பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நேர்ந்தால் தலைமை முடிவு செய்யும் என்று மட்டும் சொல்லுங்கள்.

இன்னும் தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருக்கிறது. அதனால் கூட்டணி பற்றி ஏதும் அவசரப்பட்டு சொல்ல வேண்டாம்’ என்று தன்னை சந்தித்து அதிமுக பிரமுகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார் எடப்பாடி.

இதன் பிறகுதான் சேலத்தில் இருந்தபடியே ஆளுநர் மாளிகையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்பு கொண்டு சந்திக்க தேதி கேட்டுள்ளார்.  23ஆம் தேதி ஆளுநரிடமிருந்து நேரம்  கிடைத்ததும்… கடந்த முறை டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க சென்றபோது தலைவர்களிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது போல ஆகிவிடக் கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டார் எடப்பாடி.

துணைப் பொதுச் செயலாளர்களான நத்தம் விஸ்வநாதன், கே. பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தனது நம்பிக்கைக்குரிய வேலுமணி, தங்கமணி, டெல்லியில் தற்போதைய தனது தோழமையான சி.வி. சண்முகம், சென்னையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு நேற்று (நவம்பர் 23) ஆளுநரை சந்தித்துள்ளார் எடப்பாடி.

அரசியல் நிர்பந்தத்தால் தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்துள்ளார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.

அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவருக்கு ஆளுநரை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பது அரசியல் ரீதியான மாறுதல்தான் என எடப்பாடிக்கு நெருக்கமானவர்களே கூறுகிறார்கள்.

அமித்ஷாவை சந்திக்க அவசியமில்லை என்று காரசாரமாக பேசிய எடப்பாடி ஆளுநரை சந்தித்ததே அதற்கான பரிகாரம் செய்யத்தான் என்பதுதான் அதிமுகவினருக்குள்ளேயே உலவும் தகவலாக இருக்கிறது” என்கிற மெசேஜ் க்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.

நாக்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தைக்கு ஆணுறுப்பில் ஆபரேஷன்: மதுரை ஜிஹெச்சில் நடந்தது என்ன?

என்னது தம்பியா? என்னை நானே செருப்பால அடிச்சிக்கணும்: காயத்ரி

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.