மின்சாரத் திருத்த சட்ட மசோதா என்பது ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நெசவாளர்களை கடுமையாக பாதிக்கும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருக்கிறார்.
தி.மு.க எதிர்ப்பு
தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் மின்சாரத் திருத்த சட்ட மசோதா இன்று (ஆகஸ்டு 8) தாக்கல் செய்யப்பட்டது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று கூறி மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இந்த நிலையில் மின்சாரத் திருத்த மசோதாவை தி.மு.க எதிர்ப்பது ஏன் என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.

தனியாருக்கு சாதகம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மசோதாவால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு அறிந்தே ஒன்றிய அரசு இதனைக் கொண்டு வந்திருப்பதாகக் குற்றம் சாட்டினார். அரசு மற்றும் மின்சார வாரியம் உருவாக்கிய கட்டமைப்புகளை தனியார்துறைகள் பயன்படுத்தி மின்விநியோகம் செய்வதற்கான வழிவகைகள் மின்சாரத் திருத்த சட்ட மசோதாவில் இடம்பெற்றிருப்பதாக செந்தில் பாலாஜி கூறினார். அதிக லாபம் தரும் இடங்களில் மின் வினியோக உரிமைகளை தனியார் பெற்றுக் கொள்ளும் வகையில் மசோதா திருத்தி அமைக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலவச மின்சாரம் ரத்தாகும் சூழல்
மேலும் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறக்கூடிய அனைவருக்கும் இந்த மசோதா பாதிப்பை உண்டாக்கும் என்றும், அந்தந்த மாநிலங்களில் இருக்கக்கூடிய மின்வாரியத்தின் ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரங்களை ஒன்றிய அரசு பறித்துக்கொள்ளும் சூழல் உருவாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய திருத்த மசோதாவில் ஒன்றிய அரசு பிறப்பிக்கும் உத்தரவை மாநில அரசுகள் பின்பற்றத் தவறினால் அதற்கான அபராதத் தொகை என்பது 100 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இப்படி ஒட்டுமொத்தமாக மின்சார வாரியத்தின் அதிகாரத்தை பறிப்பதன் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத் திட்டத்தை மாற்றியமைக்கும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளுவதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க நிலைப்பாடு என்ன?
எனவே தான் இந்த மின்சார சட்டத்திருத்த மசோதாவை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவதாகக் கூறிய அவர், இந்தப் பிரச்சினையில் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பினார். பல்வேறு காலக்கட்டங்களில் ஒன்றிய அரசோடு இணக்கமாக இருக்கும் அ.தி.மு.க புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை வைத்திருக்கிறார்.
–கலை.ரா
மின்சார மசோதா: எதிர்கட்சிகளின் கம்பி கட்டும் கதை- நாராயணன் திருப்பதி