துணைவேந்தர்கள் நியமனம் – மாநில உரிமை பிரச்சினை : முதல்வர் ஸ்டாலின்

அரசியல்

படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதி இருந்தால் தான் படிக்கவே வரவேண்டும் என்று சொல்வதால் தான் நீட், புதிய கல்விக்கொள்கை போன்றவற்றை அரசு எதிர்க்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்ரமணியன் மற்றும் 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர்.

உயர்கல்வியில் தமிழகம் முன்னிலை

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உயர்கல்வியில் இந்தியாவில் தலைசிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்களும், தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்களும், தலைசிறந்த கல்லூரிகளில் 32 கல்லூரிகளும், தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 நிறுவனங்கள், தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

இப்படி உயர்கல்வியில் தமிழகம் பல சிறப்புகளை கொண்டிருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் போட்ட விதைதான் இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வி

அனைவருக்கும் கல்வி, தகுதிக்கேற்ற வேலை என்பதே திராவிடக் கொள்கை. ஒருவருக்கு சமூகத்தில் நன்மதிப்பு, வேலை, வளமான வாழ்க்கை கிடைக்க உயர்கல்வியே அடிப்படையாக அமைகிறது.

வெறும் வேலை வாய்ப்பை மட்டும் தருவது உயர்கல்வியின் நோக்கமில்லை. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை என்பது 27.1சதவீதம் தான்.

ஆனால் தமிழ்நாடு 51.4 சதவீத மாணவர் சேர்க்கையுடன் முன்னிலையில் இருக்கிறது. கற்றல், கட்டமைப்பு, ஆசிரியர்தளம், ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழகம் தலைசிறந்து விளங்குகிறது.

உலகத்தரத்துக்கு இணையான முயற்சி

எண்ணிக்கை, தரம் ஆகியவற்றில் தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் தேசிய தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளன. இது வரும் ஆண்டுகளில் மேலும் சிறப்பாக உயரவேண்டும்.

கல்வித்தரத்துடன், மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையும் உயரவேண்டும் என்பதே அரசின் கொள்கை. பாடத்திட்ட மறுசீரமைப்பில் அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

பட்டப்படிப்புகளை உலகத்தரத்திற்கு இணையாக சீரமைத்து, மேம்படுத்தி பாடத்திட்ட ஆராய்ச்சி மற்றும் புதுமையாக்கலில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகளுக்கு ரூ. 1000 ஊக்கத்தொகை

உயர்கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித்திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்களின் உயர்கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சிகல்வி என்பதை இலக்காகக் கொண்டுள்ளோம்.

ஆராய்ச்சிக்காக ரூ. 50 கோடி

உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகளை செயல்படுத்தவும், ஆசிரியர்கள், ஆராய்ச்சி, இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி செய்ய ஆண்டுக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்படும். இதற்கான திட்ட அறிக்கை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட நிபுணர் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் பரிந்துரையின்படி நிதி வழங்கப்படும்.

மாணவர்களின் ஆராய்ச்சித் திறமையை அதிகப்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தவும் முதலமைச்சர் ஆராய்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் தொடங்கப்படும். இதற்காக தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  தொழில்நிறுவனங்களுடன் இணைந்து ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

மாநில அரசின் உரிமை

பல்கலைக்கழகங்களை வளர்க்க அரசு தயாராக இருக்கிறது, அதேசமயம் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்படவேண்டும். 2007-ல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பூஞ்சி தலைமையிலான ஆணையம் அளித்த பரிந்துரையின்படி துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் மசோதாவை சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். இது மாநில அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை, மாநிலத்தின் கல்வி உரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை தொடர்பான பிரச்சினை.

நீட்டுக்கு பயந்து எதிர்க்கவில்லை

நீட் தேர்வுக்கு பயந்து அதை எதிர்க்கவில்லை. அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருப்பதால் எதிர்க்கிறோம். படிப்பு தான் தகுதியை தீர்மானிக்க வேண்டுமே தவிர, தகுதி இருந்தால் தான் படிக்கவே வரவேண்டும் என்று சொல்வது இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி. கல்வியை மாணவர்களிடமிருந்து அந்நியப்படுத்தும் அனைத்தையும் எதிர்க்கிறோம். எனவே தான் நீட் மட்டுமல்லாது புதியக்கல்விக் கொள்கையையும் இந்த அரசு எதிர்க்கிறது. அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியை பொற்காலமாக்குக

புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள், புதிய புதிய பட்டப்படிப்புகளை கொண்டு வாருங்கள், மாணவர்களுக்கு எந்தப்பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ அதைப்படிக்க அனுமதியுங்கள். இந்த ஆட்சிக்காலத்தில் உயர்கல்வி பொற்காலமாக திகழவும், சமத்துவமும், பகுத்தறிவு சிந்தனையும் மிக்க சமூகத்தை கட்டமைப்பது துணைவேந்தர்களாகிய உங்களது கடமை. பழமை வாய்ந்த கருத்துக்களை புறந்தள்ளி, புதிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை மாணவர்களிடம் வளர்த்து நாட்டுக்கும் இளைஞர் சமுதாயத்திற்கும் பெருமை சேருங்கள் என்று பேசினார்.

கலை.ரா    

முகத்தில் வலி இருக்கிறதா?: டானியாவிடம் நலம் விசாரித்த முதல்வர்!

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.