ஜெயலலிதா மரண தேதி, அதிமுகவுக்கு யார் தலைவர் உள்ளிட்ட பல கேள்விகளுக்கு வி.கே.சசிகலா பதிலளித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று (டிசம்பர் 23) பரிசுப்பொருட்கள் வழங்கி கேக் வெட்டி கொண்டாடினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையேயான மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த சசிகலா , “ஒரு தாய் போலத்தான் நான் இருக்கிறேன். எல்லோருக்கும் பொதுவான ஆளாகத்தான் இருக்கிறேன். நான் யார் பக்கமும் கிடையாது.
தொண்டர்கள் யாரையுமே பிரித்துப் பார்க்கவில்லை. தொண்டர்கள் சேர்ந்து முடிவெடுப்பதுதான் என்றும் நிரந்தரமானது. அதுதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய வழி. எனக்கென்று தனி ஆள் என யாரும் இல்லை.
நான் இருக்கும் வரை தொண்டர்கள் சோர்வாக மாட்டார்கள். எல்லோரையும் நான் ஒன்றிணைக்கும் பணியைத் தொடங்கிவிட்டேன்” என்றார்.
தனது மறைவுக்குப் பிறகு என்றாவது எனக்குப் பின்னால் அதிமுக எப்படி இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரா?
“கடைசியாக மெட்ரோ திறப்பு விழாவில் கலந்துகொண்டார். அவரது மறைவை யாருமே எதிர்பார்க்கவில்லை. என்னை பொறுத்தவரைச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற போதுகூட அதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று அனைத்தையும் செய்துவிட்டு தான் சென்றேன். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று தைரியமாக சொல்கிறேன்”
நீங்கள் பார்த்து முதலமைச்சராக்கியவர் இன்று உங்களுக்கு விசுவாசமாக இல்லை என உங்களுக்குக் கவலை இருக்கிறதா?
எல்லோருடைய மனதும் ஒரே மாதிரி இருக்காது. என்னைக் கொண்டு போய் எவ்வளவு உயரத்தில் உட்கார வைத்தாலும், நான் என் பாதத்தை பார்த்துத்தான் நடப்பேன். அதனால் ஒவ்வொருவரின் மனசுதான் காரணம், அவர்களது செயல்பாடுகள் மாறும் போது யாரும் எதையும் செய்ய முடியாது.
ஆறுமுகசாமி ஆணையம் பற்றி…
நான் பெங்களூரு சிறையிலிருந்த போது ஆணையத்திடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில் மூன்று ஆப்ஷன் கொடுத்திருந்தனர். ஒன்று நேரில் வரவேண்டும், இரண்டாவது வக்கீல் வழியாகத் தெரிவிக்கலாம். மூன்றாவது எழுத்து வடிவிலும் கூறலாம். ஆணையம் அனுப்பும் கேள்விக்கு நான் பதிலளிக்க வேண்டும். நான் மூன்றாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தேன்.
அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆணைய முடிவு வெளியே தெரிய வேண்டும் என்று நினைத்தேன்.
ஏனென்றால், அரசியல் காரணங்களுக்காக நான் இருந்து போராடுவது என்பது வேறு, நான் இல்லாத போது முதுகுக்கு பின்னால் குத்துவது மனிதமே கிடையாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எங்களுக்குச் செய்யாத தொந்தரவு இல்லை. ஆனால் இரண்டு பெண்மணிகளும் சாதித்துக் காட்டினோம். எதிர்த்து நின்றோம்.
ஆட்சியைக் கொடுங்கள் என மக்களிடம் கேட்டோம். எனவே சண்டையிட பயந்து முதுகிற்கு பின்னால் இருந்து பேசுபவர்கள் நாங்கள் கிடையாது. நானும் ஜெயலலிதாவும் அப்படிதான் இருந்தோம்.
எய்ம்ஸ் மருத்துவர்கள் எங்கள் கட்டுப்பாட்டிலா இருந்தார்கள்? அவர்கள் மத்திய அரசு கட்டிப்பாட்டில் இருப்பவர்கள். தனியார் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், அரசாங்க மருத்துவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள் என அனைவரும் தினசரி அறிக்கைகள் கொடுத்தார்கள். அப்படி இருக்கும் போது ஜெயலலிதா மறைவில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.
வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாதது பற்றி…
வெளிநாட்டில் இருந்து வந்த மருத்துவர்கள், நேரடியாக அம்மாவிடமே கேட்டார்கள். ஆனால் அவர், வேண்டாம் என்று மறுத்துவிட்டார். எங்கள் மாநிலத்தில் சென்னை என்பது மருத்துவ மையம். இங்கு அளிக்க முடியாத சிகிச்சை கிடையாது. வெளியில் இருந்து மருத்துவர்களை இங்கு அழைக்கலாம் என்று கூறினார்.
எங்களுக்கு வெளிநாடு அழைத்து செல்ல ஆசை இருந்தாலும், இங்கேயே நன்றாகத்தான் இருக்கிறது என திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அன்றைய தினம் கூட மாலை டிவி பார்த்துக்கொண்டிருந்தார். செவிலியர்கள் எல்லாம் நன்கு பார்த்துக்கொண்டார்கள்.
டிசம்பர் 19ஆம்தேதி அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல நாள் பார்த்திருந்தோம்.
அப்போது, இங்கு கவனித்துக்கொண்ட அனைவருக்கும் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் நகைக்கடைக்காரர்களை வரச்சொல்லி, தோடு, வளையல் என எல்லாவற்றையும் அம்மாவே தேர்ந்தெடுத்தார்.
இத்தனை செட் எங்களுக்கு வேண்டும் என ஆர்டர் கொடுத்து டிசம்பர் 15ஆம் தேதி வேண்டும் என்றோம். இப்படி இருந்த சூழலில்தான் எதிர்பாராத விதமாக எல்லாம் நடந்துவிட்டது.
ஒன்றரை ஆண்டு திமுக ஆட்சியின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
ஒன்றரை ஆண்டு ஏன் குறைத்து சொல்கிறீர்கள். 20 மாதங்கள் ஆகிவிட்டது. தமிழகத்தில் அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதில் மூன்று மாதங்கள் அரசாங்கம் எந்த வேலையும் செய்ய முடியாது. எந்த திட்டங்களையும் அறிவிக்க முடியாது. இதுபோன்று 2026 தேர்தலின் போது 3 மாதங்கள் எதையும் செய்ய முடியாது. அப்படி பார்த்தால் இவர்களால் 6 மாதங்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எதுவாக இருந்தாலும் நான்கரை ஆண்டுக்குள் தான் செய்ய முடியும்,
தற்போது மக்கள் நாங்கள் ஓட்டுப்போடுகிறோம். எங்களுக்கு இதை செய்யுங்கள் என்று கேட்கவில்லை. நீங்களாகத்தான் வாக்குறுதி கொடுக்குறீர்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. விளம்பரப்படுத்துவது மட்டும் ஆட்சி கிடையாது.
பாஜகவுடனான கூட்டணி பற்றி…
எங்களுடைய கட்சி அமைப்பில் உள்ள அனைவருடன் கலந்தாலோசித்து அவர்கள் முடிவுப்படி முடிவெடுக்கப்படும்.
பாஜக அதிமுகவை விழுங்க பார்க்கிறது என்று சொல்கிறார்களே?
யாரும் யாரையும் விழுங்க முடியாது.
நேற்று முன்தினம் நடந்த மாசெக்கள் கூட்டத்தில் அதிமுகவைப் பிடித்த நோய் எடப்பாடி, அதற்கு ஒரே தீர்வு ஓபிஎஸ் என்று பேசியிருக்கிறார்களே?
நல்ல டாக்டர் இருந்தால் நோயாளிகளை காப்பாற்றிவிடலாம். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நிச்சயமாக ஓரணியில் திரள்வோம். நல்ல வெற்றியைப் பெறுவோம். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஈபிஎஸ்ஸும் தலைமை பொறுப்புக்கு வர நினைக்கிறார். ஓபிஎஸ்ஸும் தலைவர் பொறுப்புக்கு வர நினைக்கிறார்? நீங்கள் என்ன செய்வீர்கள்?
ஒரு வீட்டில் 10 பிள்ளைகள் இருக்கலாம். தாய் ஒன்றுதானே.
ஜெயலலிதா இறப்பு தேதி குறித்த கேள்விக்கு…
அம்மாவை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள்.
டிசம்பர் 5 தான் மரணமடைந்தாரா?
ஆமாம்
இவ்வாறு பதிலளித்தார் சசிகலா.
பிரியா
ஒற்றுமை நடைபயணம்: ராகுலுடன் கைகோர்த்த கனிமொழி
கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!