கனிமொழி கைது செய்யப்படும்போது அவரிடம் வளம் கொழிக்கும் துறைகள் இல்லை. ஆனால் இப்போது அதிக வருமானம் வரும் துறைகள் செந்தில் பாலாஜியிடம் இருக்கிறது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு தயார்படுத்தும் விதமாக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கன்னியாகுமரியில் பயணத்தை தொடங்கிய சீமான், சாமிதோப்பில் கட்சி உறுப்பினர்களுடன் இன்று (ஜூன் 16) கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதன்பின்னர், சங்கரன்கோயில்- வடக்கு புதூர் கிராம மக்கள் அழைப்பின் பேரில் அங்கு செயல்படும் குவாரியை பார்வையிட்டார்.
ஏன் இத்தனை ஆண்டுகள்?
தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசுகையில், ”ஜெயலலிதா ஆட்சியில் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஊழல் நடந்திருக்கிறது. எடப்பாடி ஆட்சியில் அவர் அமைச்சராக இல்லை. திமுக ஆட்சியில் அமைச்சராகி 2 ஆண்டுகள் ஆகின்றன.
6 மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. இப்போது கைது செய்கிறார்கள். அமலாக்கத்துறை ஒரு நேர்மையான அமைப்பாக இருந்தால் இத்தனை ஆண்டுகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பதில் சொல்லுமா?” என்றார்.
செந்தில்பாலாஜி விஷயத்தில் அக்கறை!
மேலும் அவர், “திமுக வழக்கு போடும் போது அதில் ஜனநாயகம் இருக்கும். அமலாக்கத்துறையால் பாதிக்கப்படும் போது அவர்கள் (திமுக) இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது, அதிகாரம் அத்துமீறுகிறது, பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்கள். ஆனால் மீம்ஸ்க்கும், ட்விட்டுக்கும் குண்டாஸில் போடுகிறார்கள். அரசுக்கெதிராக கருத்து சொன்னாலே குண்டாஸ் போடுகிறார்கள். அப்போதெல்லாம் இல்லாத கருத்து சுதந்திரம் இப்போது இருக்கிறது.
செந்தில் பாலாஜி விஷயத்தில் முதல்வர் இவ்வளவு வேகமாக செயல்படுவதற்கு காரணம், அடுத்து ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்துவிடுவார்களோ என்ற பயம் தான்.
செந்தில் பாலாஜியை கைது செய்த போது அத்தனை அமைச்சர்களும் சென்று பார்க்கிறார்கள். இதுவே கனிமொழியை கைது செய்தபோது கூட சென்று பார்க்கவில்லை. கனிமொழி கைது செய்யப்படும்போது அவரிடம் வளம் கொழிக்கும் துறைகள் இல்லை. ஆனால் இப்போது அதிக வருமானம் வரும் துறைகள் செந்தில் பாலாஜியிடம் இருக்கிறது.” என்றார்.
மூன்று கோரிக்கைகள்!
”நான் நேற்று கன்னியாகுமரியில் இருந்து பயணம் ஆரம்பித்தபோது, வைகுண்டத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டேன். அப்போது அப்பகுதி மக்கள் என்னிடம் 3 கோரிக்கைகளை வைத்தனர்.
அவை, வைகுண்டரை சிறைபிடித்து இழுத்து செல்லப்பட்ட சாலைக்கு ’வைகுண்டர் சாலை’ என்று பெயர் வைக்க வேண்டும்.
வள்ளலார், விவேகானந்தர் ஆகியோர் பாடத்திட்டத்தில் இருப்பது போல, வைகுண்டரின் வரலாறும் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் தோள்சீலை போராட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அரசு இந்த நிகழ்வை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “காட்டை அழித்துவிட்டால் கூட மரத்தை நட்டு என்னால் உருவாக்கி விட முடியும். ஆனால், மணல், மலையை அழித்துவிட்டால் அதனை திரும்ப கொண்டு வரவே முடியாது. இது அடுத்து வரும் பல தலைமுறைகளையும் பாதிக்கும்.
இதனால் கனிமவள கொள்ளையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சீமான் தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜிக்கு 8 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!
பாலியல் தொல்லை : குற்றவாளியான முன்னாள் டிஜிபி – வழக்கு கடந்து வந்த பாதை!