திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் 3 நாள் பயணமாக கடந்த ஜூன் 10 ஆம் தேதி புறப்பட்டுச் சேலம் சென்றார். 10 ஆம் தேதி மாலை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
ஜூன் 11 ஆம் தேதி காலை சேலம் மாநகரில் உள்ள அண்ணா பூங்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவின் போது அமைச்சர் நேரு டென்ஷன் ஆகிவிட்டார் என்கிறார்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ”கலைஞர் சிலை 16 அடி உயரத்தில் வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பூங்கா முகப்பில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் அருகில் கலைஞர் சிலை நிறுவப்பட்டது.
கலைஞர் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு ஜூன் 10 ஆம் தேதியே கே.என்.நேரு விழா மேடையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை அருகே மேடை அமைக்க இருந்ததை கண்ட அமைச்சர் நேரு, ‘இங்கே மேடை போட வேண்டாம். தள்ளிப்போடுங்கள்’ என அங்கிருந்த உள்ளூர் நிர்வாகிகளிடமும் வேலை செய்தவர்களிடமும் ஆலோசனை வழங்கிவிட்டு சென்றார்.
ஆனால் அமைச்சர் சொன்னது போல் மேடையை தள்ளி போடாமல் அங்கேயே போட்டுள்ளனர்.

நேற்று, ஜூன் 11 ஆம் தேதி காலை முதல்வர் ஸ்டாலின், மேடையில் ஏறியதும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் மட்டுமே அனைத்து போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் பார்வையிலும் பட்டன.
இதை பார்த்த திமுக நிர்வாகிகள் சிலரும், இது என்ன கலைஞர் திறப்பு விழா நிகழ்ச்சியா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலை திறப்பு நிகழ்ச்சியா என பேசிக்கொண்டனர்.
இதை கேட்ட அமைச்சர் கே.என். நேரு பயங்கரமாக டென்ஷன் ஆகிவிட்டார். மேடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளிடம் சத்தம் போட்டார்” என்கிறார்கள்.

மேலும் ஜூன் 10 ஆம் தேதி நடந்த செயல்வீரர்கள் கூட்டம் குறித்து உள்ளூர் நிர்வாகிகள் கூறுகையில்,
“இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே.என் நேரு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மூன்று மாவட்ட செயலாளர்களான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், சிவலிங்கம், கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது, முன்னாள் அவைத்தலைவர் கலையமுதன், ஸ்டாலினுக்கு பட்டு வேட்டியைப் போர்த்த மேடைக்கு ஏற வந்தார். அவரை பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனின் ஆட்கள் தடுத்தனர்,
இதனை மேடையிலிருந்து கவனித்த ஸ்டாலின், கலையமுதனை கைகாட்டி மேடைக்கு அழைத்தார். மேடைக்கு ஏறிவந்த கலையமுதன் ஸ்டாலினுக்கு பட்டு வேட்டியை அளித்துவிட்டு, ஒரு கவரும் கொடுத்தார்.
இரண்டையும் பெற்றுக்கொண்ட முதல்வர், ’கவரில் என்ன இருக்கிறதென்று எனக்கு தெரியும், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றார்.

அதுபோன்று மேடையின் முன்வரிசையில் மாநகர மேயர் ராமச்சந்திரனுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரையும் மேடையில் ஏறாத அளவுக்கு பார்த்துக்கொண்டனர் உள்ளூர் திமுக கோஷ்டியினர்” என்றனர்.
வணங்காமுடி
ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதா? – அண்ணாமலையை பொளந்துகட்டும் ஜெயக்குமார்