அவசியமில்லாமல் ஏன் அமித்ஷாவை பாக்கணும்? எகிறும் எடப்பாடி

அரசியல்

மயிலாடுதுறையில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 16) செய்தியாளர்களை சந்தித்தார்.

மழை பாதிப்பு, நிவாரணம் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “சிலநாட்களுக்கு முன் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்தார். அதையொட்டி பாஜவுடனான உறவு எப்படி உள்ளது? நீங்கள் ஏன் அமித் ஷாவை சந்திக்கவில்லை?” என்று கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது டென்ஷனான பழனிசாமி, “மொதல்ல பத்திரிக்கை நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். 31 ஆண்டுகள் தமிழகத்தை நாங்கள் ஆட்சி செய்திருக்கின்றோம். இப்போது தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி நாங்கள்.

பாஜக ஒரு தேசிய கட்சி. எப்போ பாத்தாலும், அமித்ஷா சென்னைக்கு வந்தாலும் சரி, இல்ல பிரதமர் தமிழகம் வந்தாலும் சரி எடப்பாடி பழனிச்சாமி போயி பாக்கல.. எடப்பாடி போயி பாக்கலனு ஏதோ அவதூறு பரப்புவது போல ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தயவு செய்து பரப்பாதீர்கள்” என பொரிந்து தள்ளிட்டார்.

மேலும், “அவர் பாரத பிரதமர் என்ற முறையிலும் நான் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், அரசு நிகழ்ச்சி என்றால் நான் சென்று பார்ப்பேன். தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் அமித்ஷா வை ஏன் எடப்பாடி பழனிசாமி சென்று சந்திக்கவில்லை? இவர் கேட்டார் – அவர் நேரம் கொடுக்கலைனு செய்தி போடுகின்றனர். இது எல்லாம் தவறான செய்தி.

எங்களுக்கு சந்திக்க வாய்ப்பிருந்தால் நாங்கள் சென்று பார்ப்போம். இல்லை என்றால் பார்க்கவேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்களும் அதே போலதான்” என்று ரொம்பவே சூடாகவே பதில் சொல்லிருக்கிறார் எடப்பாடி.

பாஜக மீது இப்படி டென்ஷனான எடப்பாடி அடுத்து ஊடகங்களையும் ஒரு பிடி பிடித்தார்.

“என்னை பற்றி செய்தி போடலனா அவங்களுக்கு தூக்கமே வராது. எங்க செய்தி போட்டா தான் பத்திரிக்கையே விக்குது. இது தான் உண்மை. மத்த எந்த செய்தி போட்டாலும் விக்கிறது இல்ல.

எனக்கு தெரிஞ்ச ஒரு பத்திரிக்கையாளர் கிட்ட பேசும் பொது கேட்டேன், ஏங்க.. ஆளும் கட்சியா இருக்கும் போதும் எங்கள பத்திதான் செய்தி போடுறீங்க.. எதிர்க்கட்சியா இருக்கும் போதும் எங்கள பத்தி தான் நியூஸ் போடுறீங்க, ஊடகத்திலும் எங்கள தான் பேசுறீங்க.. ஏங்கனு கேட்டேன்.

அதுக்கு அவர்.. அய்யா உங்க கட்சி பத்தியும், நிர்வாகிகள் பத்தியும் செய்தி போட்டா தான் பத்திரிக்கையே விக்குது னு சொல்றாங்க.. ஊடக நண்பர்களுக்கும் பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்களால் உங்களுக்கு நன்மை கிடைக்கின்றது என்பது மகிழ்ச்சி” என டென்ஷனுடன் தொடங்கியவர் சிரிப்புடன் முடித்தார்.

நேற்று (நவம்பர் 15) மின்னம்பலத்தில் டிஜிட்டல் திண்ணை பகுதியில் பாஜக கூட்டணி: தொண்டர்கள் பல்ஸ் பார்த்த எடப்பாடி என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் எடப்பாடியிடம் பல மாவட்டச் செயலாளர்கள்,

‘நீங்க அமித் ஷாவை பார்க்கப் போகாதது சரிதான். நாம் ஏன் மோடி பின்னாலயும் அமித் ஷா பின்னாலயும் போய் நிக்கணும்னு கட்சிக்காரங்க கேட்குறாங்க என்று தெரிவித்திருந்தனர்’ என்பதை சுட்டிக் காட்டியிருந்தோம்.

இந்த பின்னணியில் அமித் ஷா எப்போது வந்தாலும் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று எடப்பாடி கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

வினோத் அருளப்பன்

கூட்டணி பற்றி விவாதிக்கிறோம்: கமல் புது முடிவு!

60,000 பேருக்கு வேலை… தமிழ் நாட்டிற்கு வரும் மெகா ஐபோன் ஆலை! எந்த மாவட்டத்தில் தெரியுமா?

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *