பொங்கல் தொகுப்பில் ஏன் பணப்பரிசு இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!

Published On:

| By christopher

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு நாளை விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே கட்டப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (டிசம்பர் 30) திறந்து வைக்க உள்ளார்.

இந்த நிலையில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கன்னியாகுமரி ஆட்சியர் அழகு மீனா உள்ளிட்டோர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கருத்தரங்கு நடைபெற உள்ள மேடையை இன்று பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசுவிடம், பொங்கல் தொகுப்பில் ஏன் பணப்பரிசு இல்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், பொங்கல் பண்டிகைக்கு முதல்வர் ஆணைப்படி பொங்கல் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏறத்தாழ 749.76 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு மட்டும் 2 மிகப்பெரிய இயற்கை இடர்பாடுகளை நாம் சந்தித்திருக்கிறோம். ஒன்று மிக்சாம் புயல். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிகக்கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அடுத்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதன் மூலம் நமக்கு என்ன நெருக்கடிகள் உருவாகி இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

மிக்சாம் புயல் காரணமாக நமக்கு ஏற்பட்டுள்ள சேதங்களில் மதிப்பீடாக 19,692 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்டுள்ள 24. 25 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 6,000 ரூபாய் வீதம் வழங்கி இருக்கிறோம். அதற்கு மட்டும் 1,487 கோடி ரூபாய் அரசு செலவளித்து இருக்கிறது.

அதே போன்று தென் மாவட்டங்களில் கடும் மழை வெள்ள பாதிப்புகளுக்கு 18,214 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாம் ஒன்றிய அரசை வலியுறுத்தி இருக்கிறோம். முழுமையாக பாதிக்கப்பட்ட 6.63 லட்சம் குடும்பத்தினருக்கு அன்று 6,000 ரூபாய் வீதம் நிவாரணம் வழஙகியிருக்கிறோம். பகுதியாக பாதிக்கப்பட்ட 14.30 லட்சம் குடும்பத்தினருக்கு தலா 1000 ரூபாய் வீதம் வழங்கியுள்ளோம். அதற்காக நாம் 541 கோடி ரூபாய் நாம் கொடுத்திருக்கிறோம். ஆக மொத்தம் 2,028 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதி பொறுப்பிலிருந்து செலவிட்டு இருக்கிறோம்.

ஆக மொத்தம் கடந்த ஆண்டு புயல் மழை வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் 37,906 கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். ஆனால் நமக்கு மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்து வெறும் 276 கோடி ரூபாய் தான் வழங்கியுள்ளார்கள்.

சமீபத்தில் இந்த ஆண்டு இறுதியில் பெஞ்சல் புயல் தாக்கியிருக்கிறது. அதற்காக மத்திய அரசிடம் 6,725 கோடி ரூபாய் கேட்டுள்ளோம். ஆனால் கிடைக்கவில்லை. இருந்தாலும் சுமார் 7.2 லட்சம் குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் வீதம் வழங்கியதன் மூலம் 144 கோடி ரூபாய் செலவளித்திருக்கிறோம். நாம் கேட்டிருப்பது மிக அதிகம், கிடைத்திருப்பது மிகக்குறைவு.

இதுபோன்ற சூழ்நிலையில் ஒரு நிதிச் சுமையை நம்முடைய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. நிதிச்சுமைக்கு நடுவில் தான் தொடர்ந்து வழங்கக்கூடிய ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாயை நாம் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அது நமக்கு மிகப்பெரிய நிதிச்சுமை இருந்தாலும் கவனமாக கையாண்டு அனைவருக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

பொங்கல் பரிசுத் தொகையை பொறுத்தமட்டில் இந்த ஆண்டு வழங்குவதில் நிதிச்சுமை காரணமாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டால்கூட, முதல்வர் பொங்கல் தொகுப்பு பொருள்களுக்காக நிதி வழங்கியுள்ளார். வரக்கூடிய காலங்களில் நிதி நிலைமையை சீராக்கும் நடவடிக்கை வரும். வரக்கூடிய காலங்களில் நல்ல சூழ்நிலை உருவாகும் என நம்புகிறேன்.

மகளிர் உரிமைத்தொகை பெற்றுவரும் மகளிருக்கு பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி வங்கிக்கணக்கில் 1000 ரூபாய் வரும். இந்த முறைமுறை முன்கூட்டியே பயன்பெறும் தாய்மார்களுக்கு வழங்கலாம் என்ற கருத்துரு அரசின் பரிசீலனையில் இருக்கிறது. முதல்வரின் ஆணையையும் அறிவுரையும் பெற்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கு அதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறது” என தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தென் தமிழகத்தில் முதல் டைடல் பார்க்… திறந்து வைத்தார் ஸ்டாலின்

WTC பைனலுக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா… இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளதா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share