முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்வது ஏன்?
தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நாளை டெல்லி செல்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(ஏப்ரல் 26) காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். மாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்நிலையில் நாளை தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்று குடியரசுத் தலைவரை பார்க்க உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“முன்னாள் முதல்வர் கலைஞரின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021அன்று வெளியிட்ட அறிவிப்பில்,
“சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, இம்மருத்துவமனை கட்டடம் தரைத்தளம் மற்றும் 6மேல் தளங்களுடன் சுமார் 51,429சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில் இருதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, ரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர் சிறப்புப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் நாளை இரவு(ஏப்ரல் 27) சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்று,
நாளை மறுநாள்(ஏப்ரல் 28) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி, கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,000படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.
அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இப்பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: நீதிமன்றத்தை நாடிய விளையாட்டு நிறுவனங்கள்!
‘அசுத்தமா இருக்கு, ஆக்சிஜன் இல்ல’ : அரசு மருத்துவமனையில் டிஎம்எஸ் ஆய்வு!