சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி ஒதுக்குவது தாமதமாவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு சார்பில் இன்று (ஆகஸ்ட் 8) பதில் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் தற்போது மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஏற்கெனவே விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து தற்போது ரூ.63,246 கோடி மதிப்பில்கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என மொத்தம் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெற்று வருகின்றன.
எனினும் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு மத்திய அரசு நிதியை ஒதுக்குவதில் தொடர்ந்து கால தாமதம் செய்து வருவதாக ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களவையில் இதுதொடர்பாக திமுக எம்.பி. தயாநிதி மாறன் இன்று கேள்வி எழுப்பினார்.
அவர், “மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப்பணிகளுக்காக கடந்த மூன்றாண்டுகளாக நிதி ஒதுக்குவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? தற்போது இத்திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது? திட்டத்தை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” என்று தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், “63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிமீ பாதை நீளம் கொண்ட சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்தது.
திட்டத்தின் சாத்தியக்கூறு மற்றும் வளங்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்தே இத்தகைய அதிக செலவு மிகுந்த திட்டங்களின் ஒப்புதல் அமையும். தற்போது, சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டம், மாநில அரசின் திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதை செயல்படுத்துவதற்கான செலவை தற்போது தமிழக அரசே ஏற்றுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும்” : எடப்பாடி
Paris Olympic : மீண்டும் வெண்கலம்… 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி சாதனை!