உண்மையான தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் அனைவரையும் ஒரே அணியில் இணைப்பதற்காக டிடிவி தினகரனை இன்று (மே 8) சந்தித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பின் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஓபிஎஸ் பேசுகையில், “பலநாட்களாக தினகரனை எப்போது சந்திப்பீர்கள் என்று பலரும் கேட்டு வந்த நிலையில், இன்று நாங்கள் இருவரும் சந்தித்துள்ளோம். சசிகலா இப்போது வெளியூரில் இருக்கிறார். அவரையும் விரைவில் சந்திப்போம்.” என்றார்.
மேலும் அவர், “உண்மையான தலைமையின் கீழ் அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே அணியாக இணைய வேண்டும். அதற்காக தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிமுகவை புதுப்பொலிவுடன் நிலைநிறுத்துவோம்.” என்றார்.
டிடிவி தினகரன் பேசுகையில், “எம்.ஜி.ஆர் தோற்றுவித்த, ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக அதன் உண்மையான தொண்டர்கள் கையில் இருக்க வேண்டும். அதனை பணபலத்துடன் கபளீகரம் செய்தவர்களிடம் இருந்து மீட்டெடுப்பதே எங்களுடைய இலட்சியம்.
நேற்றுக்கூட புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு குறித்து பேசியிருந்தேன். அது இன்று நடந்துள்ளது. நாங்கள் அதிமுகவை மீட்டெடுக்கவேண்டும் பொதுநலத்துடன் சேர்ந்துள்ளோம்” என்றார்.
தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக – அமமுக இரு இயக்கங்களும் சேர்ந்து ஒரே இலட்சியத்துடன் செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளோம்.” என்றார்.
கிறிஸ்டோபர் ஜெமா
WTC Final: இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் செய்த பிசிசிஐ
பால்ய திருமணம், இரு விரல் டெஸ்ட்… உண்மை என்ன? – மின்னம்பலம் புலனாய்வு ரிப்போர்ட்!