ஆளுநர் மாளிகை பள்ளிவாசல் மூடப்பட்டிருப்பது ஏன்? ஜவாஹிருல்லா கேள்வி!

அரசியல்

சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் பள்ளிவாசல் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதாகவும் இதில் உள்நோக்கம் இருப்பதாகவும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 11) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே பல ஆண்டுகளாக ஒரு பள்ளிவாசல் இயங்கிவந்தது. பயணிகளுக்கும், சுற்றுப்புறத்தில் பல்வேறு பணிகளில் இருப்போர்க்கும் தொழுகையை நிறைவேற்ற இப்பள்ளிவாசல் பெரும் உதவியாக இருந்தது.

ஐவேளைத் தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகைகள் யாவும் இப்பள்ளிவாசலில் மிகவும் அமைதியாக நடந்துவந்தன. இந்தப் பள்ளிவாசலாலோ, பள்ளிவாசலுக்கு வருபவர்களாலோ எவ்விதத் தொந்தரவும் பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை.

தொழுகைக்கு வருபவர்கள் தங்களைப் பற்றிய விவரங்கள் மற்றும் வாகன விவரங்களை நுழைவாயிலில் காவல் அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டே தொழுது வந்தனர்.

கொரோனாவில் பூட்டப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு இயல்புநிலைத் திரும்பிவிட்ட பிறகும் ஆளுநர் மாளிகை வளாகப் பள்ளிவாசல் மட்டும் தொடர்ந்து பூட்டப்பட்டு தொழுகைக்கு அனுமதியும் மறுக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. இதில் உள்நோக்கம் உள்ளதோ என்ற ஐயமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து ஆளுநர் உரிய கவனமெடுத்து, பல ஆண்டுகளாக அமைதியாகத் தொழுகை நடந்துவந்த பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடைபெற ஆவண செய்ய வேண்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே பாஜக சார்புடையவராக செயல்பட்டு வருகிறார் என்று அவர் மீது புகார்கள் இருக்கும் நிலையில், ஜவாஹிருல்லாவின் இந்த அறிக்கை அரசியல் அரங்கில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

-வேந்தன்

அதானி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அரசு பதில் என்ன? நழுவிய நிர்மலா

ஆட்டநாயகன் ஜடேஜாவுக்கு அபராதம் : குவியும் கண்டனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *