கலைஞர் முதன்முதலில் வென்ற குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் தான் எதற்காக போட்டியிடவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அவர் ரூ.52.40 கோடி செலவில் முடிவுற்ற 23 திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, ரூ.114:16 கோடி மதிப்பிலான 39 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்
நாட்டினார்.
மேலும் 1,22,019 பயனாளிகளுக்கு ரூ.267.43 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கரூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரூ.267 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம் வழங்கும் மிகப் பிரமாண்டமான அரசு விழாவில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சிறப்பு விருந்தினர்கள் ஆகிய பயனாளிகள் நீங்கள்தான். இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அக்கா, அம்மா, தங்கைகளே உங்கள் அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் கலைஞர் முதன்முதலில் வெற்றி பெற்ற குளித்தலை தொகுதி குறித்த சுவாரசியமான தகவலையும் கூட்டத்தில் பேசினார்.
அவர், “கலைஞர் அவர்கள் தனது அரசியல் பயணத்தை தனது சட்டமன்ற உறுப்பினர் பயணத்தை இதே கரூர் மாவட்டத்தில் இருந்து தான் தொடங்கினார்.
கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் அவர் முதன் முதலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட் டது இந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் தான்.
இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நான் சட்டமன்ற தொகுதியில் நிற்பதாக பேச்சு எழுந்தபோது, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள்,
நீங்களும் குளித்தலை தொகுதியில் தான் நிற்க வேண்டும் அங்கு தான் முதன் முதலில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வெற்றி பெற்றார்கள் என்று என்னை கேட்டுக் கொண்டார்.
அதற்கு நான், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியும் கலைஞர் அவர்கள் நின்று வென்ற தொகுதி தான்.
அது ஒரு சிறிய தொகுதி அதில் விரைவாக எனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பிற மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு போவதற்கு வசதியாக இருக்கும் என்று சொன்னேன்.
சொன்னது போலவே கரூர் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் அண்ணன் செந்தில் பாலாஜி அவர்கள் வெற்றி வாகை சூடி உள்ளார்கள்.
கரூர் மாவட்டத்திற்கு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிக்காகவும் வருகை புரிந்திருக்கிறேன்.
ஆனால் தற்போது தான் நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு உங்கள் ஆசியோடு கரூர் மாவட்டத்திற்கு முதல் முதலாக வந்திருக்கிறேன்.” என்று பேசினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமர் வேட்பாளர் ஸ்டாலின்: கார்த்திக் சிதம்பரம் ஆதரவு
பத்துதல படத்தில் சிம்பு கொடுத்த ’பஞ்ச்’ பதிலடி!