நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும் தொழிற்சாலைகளுக்கும், தொழில்துறைக்கும் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடரும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தென்கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் ரூ.20 ஆயிரம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (மே 11) கையெழுத்தானது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் பேசுகையில், ”1996-ஆம் ஆண்டு கலைஞர் ஹூண்டாய் நிறுவனத்தினுடைய முதல் அலகிற்கு அடிக்கல் நாட்டினார். 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டாவது தொழிற்சாலையையும், கலைஞரால் 2008- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது.
இதே ஹூண்டாய் நிறுவனத்தினுடைய ஒரு கோடியாவது காரை 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொழிற்சாலையில் இருந்து நான் அறிமுகம் செய்து வைத்ததை இந்த நேரத்தில் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டிற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே உள்ள நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சியின் காரணமாக இந்த நிறுவனத்தினுடைய மொத்த முதலீடு சுமார் 23 ஆயிரத்து 900 கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது நமக்கெல்லாம் பெருமை அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது.
ஆட்டோமொபைல் மற்றும் அதன் பாகங்கள் தயாரிப்பில், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதலிடத்தை வகிக்கிறது. அதன் அடுத்த பரிணாம வளர்ச்சியாக, மின்னூர்திகள் தயாரிப்பில் தற்போது தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உருவாகியுள்ளது.
ஹுண்டாய் நிறுவனம், 159 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு அதிகமானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தொழில்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த தங்கம் தென்னரசு, தொழில் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோர் இந்திய அளவில் மட்டும் இன்றி, பல்வேறு நாடுகளுக்கும் சென்று பெரும் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி புரிந்துள்ளனர்.
மேலும், இன்றைய தினம், தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா மிகவும் முனைப்புடன் செயல்பட்டு, அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நிலையில், உங்களுக்கு நான் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழ்நாடு அரசு, தொழில் துறையினருக்கு அளித்துவரக்கூடிய ஆதரவும், தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அரசு பேருந்தில் பறை இசைக்கருவி: மாணவியை இறக்கிவிட்ட நடத்துனர் சஸ்பெண்ட்!
இலாகாவை மாற்றிய முதல்வர்: பிடிஆர் ரியாக்ஷன்!