புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சொத்துக்குவிப்பு வழக்கை மையப்படுத்தி அமலாக்கத்துறை நேற்று (மார்ச் 21, 2024) ரெய்டு நடத்தியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என்று வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நேரத்தில் இந்த ரெய்டு நடந்திருப்பது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவரது சொத்துமதிப்பு 6 கோடியில் இருந்து 57 கோடியாக அதிகரித்ததாக அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறையினர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய 43 இடங்களில் ரெய்டு நடத்தியிருந்தனர்.
அதற்கு அடுத்ததாக வேல்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு 2020 ஆம் ஆண்டு செயல்படாத மருத்துவமனைக்கு போலியாக சான்றிதழ்கள் வழங்கியதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 2022 செப்டம்பர் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்பனை செய்யவும் அனுமதித்ததாகவும், இதற்காக தமிழக அமைச்சர்கள் லஞ்சம் பெற்றதாகவும் விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. 2022 ஜூலை மாதத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இந்த வழக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே நிலுவையில் இருந்துவரும் நிலையில், தேர்தல் நேரத்தில் திடீரென அமலாக்கத்துறை ஏன் இப்போது சோதனை நடத்த வேண்டும், இதில் உள்நோக்கம் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக தரப்பினர்.
மேலும் குறிப்பாக பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறி வேட்பாளர் பட்டியலை அறிவித்து தேர்தலுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டிருக்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது அதிமுகவின் தேர்தல் பணிகளை முடக்கும் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக தரப்பில் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறையின் சோதனைக்கு கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சகோதரர் @Vijayabaskarofl அவர்கள் இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனைக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். @AIADMKOfficial
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) March 21, 2024
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளதில் குறிப்பாக திமுக தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது, “விஜயபாஸ்கர் தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் இப்போது வரை அரசின் பல கான்ட்ராக்ட்களைக் கைப்பற்றுவதில் அவரது கையே ஓங்கியிருக்கிறது. குறிப்பாக அவர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்ததால், தமிழ்நாட்டின் அரசு மருத்துவமனை மற்றும் மருந்துகள் தொடர்பான முக்கியமான பல கான்ட்ராக்ட்களில் இன்னும் விஜயபாஸ்கரின் தலையீடுகள் குறையவில்லை. எங்கள் திமுக ஆட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இப்போதாவது ஒன்றிய பாஜக ஆட்சி மேற்கொள்கிறது என்பதே எங்களுக்கு திருப்திதான்” என்கிறார்கள் திமுகவினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2ஜி வழக்கு – சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு ஏற்பு!
பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன்? : தங்கர் பச்சான் விளக்கம்!
அமலாக்கத்துறை கைது… இரவு முழுவதும் எங்கு இருந்தார் கெஜ்ரிவால்?