மணிப்பூர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜோதிமணி மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
மணிப்பூரில் இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபடுவதால் நாடாளுமன்ற அலுவல் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜோதிமணி எம்பி நமக்கு அளித்த பேட்டியில் ,”மணிப்பூரில் நடைபெறும் இந்த பிரச்சனை இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெறவில்லை. கிட்டத்தட்ட 77 நாட்களுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது.
ஒரு மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 60,000 பேர் இடம்பெயர்ந்து முகாம்களில் இருக்கிறார்கள் என்று மணிப்பூர் ஆளுநர் கூறுகிறார். நான் இப்படி ஒரு சூழலை இதுவரை பார்த்ததில்லை. மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரே கூறுகிறார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் சென்ற போது, பெண்கள் கதறி அழுதனர். அப்போது நானும் ராகுல் காந்தியுடன் மணிப்பூர் சென்று இருந்ததால் அந்த காட்சிகளை எல்லாம் என் கண்களால் பார்த்தேன். அந்த காட்சிகள் எல்லாம் நெஞ்சையே உறைய வைக்க கூடியதாக இருந்தன.
எப்படியாவது இந்த பூமியில் அமைதி திரும்பாதா இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதையெல்லாம் செய்யாத ஒரு அரசாங்கம், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்த அந்த காட்சியை யாராலும் எளிதில் கடந்து செல்ல முடியாது.
இதுபோன்ற நூறு சம்பவம் நடந்திருக்கிறது என்று மணிப்பூர் முதல்வர் சொல்வது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.
நூற்றுக்கணக்கான சம்பவங்கள் இதுபோன்று நடந்திருக்கிறது என்று சொல்லும் போது, அந்தப் பெண்களை காப்பாற்ற இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள், காவல்துறை தான் எங்களை அந்த கும்பலிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று சொல்லும்போது இதைவிட வேறு கொடுமை எங்கேயாவது பார்த்திருப்போமா?
இன்னும் அங்கு வன்முறை நிற்காமல் அதிகமாகியிருக்கிறது. எனவே பிரதமர் நேரடியாக தலையிட்டு, மக்கள் நம்பிக்கையை இழந்த மணிப்பூர் முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும். அவர் ராஜினாமா செய்ய மறுக்கிறார் என்றால் அரசாங்கத்தை கலைத்துவிட்டு உடனடியாக கவர்னர் ஆட்சியை கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த நிமிடம் வரை கூட பிரதமர் மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த மாநிலம் இந்தியாவில் தானே இருக்கிறது. பாகிஸ்தானிலோ சீனாவிலோ இல்லையே.
மணிப்பூர் பிரச்சனை பற்றி அவர் பேசாமல் வெறும் 30 நொடிகள் பேசுகிறார். மணிப்பூர் வீடியோவை பார்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் எடுப்போம் என்று சொல்கிறார். இதைவிட ஒரு மோசமான தருணம் ஒரு அரசாங்கத்துக்கு இருக்க முடியுமா?.
இது போன்ற சூழலில் வன்முறையை பரப்புவதற்கான ஒரு கருவியாக பெண்களை பயன்படுத்துகிறார்கள் என்று சொல்கிறார்கள்.
அப்படியானால் இந்த பிரச்சனையின் ஆணி வேர் மணிப்பூரில் பரவி இருக்கக்கூடிய வன்முறை.
இதைக் கேட்டால் பிரதமர் ராஜஸ்தானில் நடக்கிறது சத்தீஸ்கரில் நடக்கிறது என்று ஒப்பீடு செய்கிறார். இது ஒப்பீடு செய்யக்கூடிய சம்பவமா?
எங்கு பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தாலும் அது நிச்சயமாக நாம் தட்டிக் கேட்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில் ராஜஸ்தான் அரசாங்கம் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து இருக்கிறது. அந்த குற்றவாளி யார் என்றால் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்.
ஆனால் மணிப்பூரில் நிலைமை அப்படி இல்லை. ஒரு பிரதமரே இதைப் பற்றி பேசவில்லை என்றால் வன்முறை எப்படி நிற்கும். நாடாளுமன்றத்தில் பேச வேண்டியதுதானே?
77 நாட்களாக அமைதியாக இருக்கிறார் என்றால் அந்த வன்முறையை பிரதமர் ஆதரிக்கிறாரா? அல்லது தூண்டுகிறாரா?
யாராவது ஒருவருக்கு பிறந்தநாள் என்றால் அவரைப் பற்றி ஒரு முழம் நீளத்துக்கு பிரதமர் பேசுகிறார். அரசியல் மேடைகளில் வாய் மூடாமல் பேசுகிறார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் தானே பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது அந்த மாநில மக்களுக்காக ஆறுதலாக இரண்டு வார்த்தை இவரால் பேச முடியாதா?
அந்த மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு பிரதமர் முயற்சி செய்யமாட்டாரா?
இப்போதைக்கு நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவது முக்கியமல்ல. மணிப்பூரில் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். தலையை வெட்டி தொங்க விட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு நாட்டில் நடக்கக்கூடிய விஷயமா?
பெண்களை நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்? இதெல்லாம் சாதாரணமான விஷயமா? சொந்த மாநிலத்தில் 60 ஆயிரம் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர் இதெல்லாம் சாதாரணமாக விட்டு விட முடியுமா.
இதை பேசாமல் எந்த மசோதாவை இவர்கள் நிறைவேற்றப் போகிறார்கள். இந்த பிரச்சினை வடகிழக்கு மாநிலங்களிலும் பரவினால் என்ன செய்ய முடியும்?
இவர்கள் மசோதாவை நிறைவேற்றட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. எத்தனையோ மசோதாக்களை நிறைவேற்றி நாட்டை ஒழித்து விட்டார்கள். இன்னும் எத்தனை மசோதாக்கள் நிறைவேற்றினாலும் அதுதான் நடக்கும்.
இவர்கள் மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் விலைவாசி குறைந்து விட்டதா வேலை வாய்ப்பின்மை குறைந்து விட்டதா அல்லது நாட்டில் அமைதி நிலவுகிறதா?.
ராகுல் காந்தி உயிரை பணயம் வைத்து மணிப்பூர் சென்று வந்தார். அங்கு இருதரப்பு மக்களிடமிருந்தும் ராகுல் காந்திக்கு ஆதரவு இருக்கிறது.
மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லி ஆளுநரை சந்தித்து, இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி பிரதமரா? இல்லை நரேந்திர மோடி பிரதமரா?
ராகுல் காந்திக்கு எந்த பதவியும் இல்லை. மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பி பதவியை கூட, உங்கள் ஊழலை வெளிப்படுத்தினார் என்பதற்காக பிடுங்கிவிட்டீர்கள். அவர் இருந்த வீட்டையும் பிடுங்கி விட்டு துரத்தி விட்டீர்கள்.
மிகப்பெரிய பொறுப்பில் இருக்கக்கூடிய பிரதமர் மணிப்பூருக்கு போக கூடாதா?
உள்துறை அமைச்சர் மணிப்பூருக்கு சென்று விட்டு இரண்டு தரப்பு மக்களையும் சந்திக்க முடியாமல் ஓடி வர வேண்டிய சூழல் ஏன் இருக்கிறது?பிரதமர் அங்கு செல்ல முடியாத சூழல் ஏன் இருக்கிறது? ஏனென்றால் மக்கள் இவர்களை எதிர்க்கிறார்கள்.
பாஜகவை சேர்ந்தவர்களே அக்கட்சியில் இருந்து விலகி செல்லக்கூடியதை பார்க்க முடிகிறது” என்று ஆவேசமாக கூறினார் ஜோதிமணி எம்பி.
வீடியோவில் காண : https://www.youtube.com/watch?v=vzsDZA_hsuk&t=11s
பேட்டி : பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு: பிரியா
ED ரெய்டு குறித்த கேள்வி: டென்ஷனான பொன்முடி