டிஜிட்டல் திண்ணை: மோடிக்காக காத்திருந்து எடப்பாடி, பன்னீர் ஏமாந்த கதை! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மோடி சென்னை விசிட் பற்றிய விதவிதமான படங்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்றுள்ளார். சென்னை சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் சென்னை வைப்ஸை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் நரேந்திர மோடி. அவர் நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்துக்கு வந்தபோது  ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள் ஆகியோரைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியும்,  முன்னாள் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. என்ற முறையில் ஓ.பன்னீரும்  வரவேற்கும் பட்டியலிலும் வழியனுப்பும் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்கள்.

ஆனால் நேற்று காலை முதலே மோடியை எடப்பாடியும் பன்னீரும் சந்திப்பார்கள் என்று அவர்கள் தரப்பில் இருந்தே ஊடகங்களைத் தொடர்புகொண்டு சொல்லியிருக்கிறார்கள்.  அதனால்தான் எடப்பாடிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுவிட்டது. பன்னீருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்று முதலில் செய்தி வந்திருக்கிறது. அப்போது பன்னீர் தரப்பினர் டிவி களைத் தொடர்புகொண்டு, ‘எங்களுக்கும் நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள்,  ஏன் தவறாக செய்தி போடுகிறீர்கள்?’ என்று கேட்க…பன்னீருக்கு பத்து நிமிடம் என்று டிவிகள் அடுத்து செய்தி வெளியிட்டன.

மேலும் மோடி சென்னையில் நேற்று இரவு முதலில் தங்குவதாக ஒரு திட்டம் போடப்பட்டது. அந்த நிலையில்தான் அவர்  பாஜகவின் கட்சி நிர்வாகிகளையும், மற்ற கட்சிப் புள்ளிகளையும்  சந்திப்பார் என்று சொல்லப்பட்டது. அந்த மற்ற தலைவர்களில் டிடிவி தினகரனின் பெயர் கூட அடிபட்டது.

ஆனால் பிரதமரின் வருகைக்கு ஓரிரு தினங்களுக்கு முன் தயாரிக்கப்பட்ட எஸ்பிஜி கன்ட்ரோல் ரூம் பட்டியலில் பிற்பகல் சென்னை வரும் பிரதமர் மோடி, அன்று இரவே மைசூர் திரும்புகிறார் என்றும், மைசூரில் இருந்து ஏப்ரல் 9 ஆம் தேதி முதுமலைக்கு செல்கிறார் என்றும் நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டது.

பிரதமரின் வருகையில் அவர் என்னென்ன நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார், அது எத்தனை நிமிடங்கள், யார் யார்  மேடையில் இருப்பார்கள் என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.  டெல்லியில் உள்ள எஸ்பிஜி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து 7 ஆம் தேதியே இந்த நிகழ்ச்சி நிரல் பற்றிய விவரங்கள் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், டிஜிபி,  தமிழ்நாடு அரசின் பொதுத் துறையில் இருக்கும் புரோட்டகால் பிரிவு,  சென்னை கமிஷனர், உளவுத் துறை ஐஜி, எஸ்பிஜியின் சென்னை கேம்ப் அலுவலகm,  சென்னை மாவட்ட கலெக்டர், நீலகிரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு அந்த விவரங்கள் அனுப்பப்பட்டது. 

ஏற்கனவே தமிழக அரசு அதிகாரிகளோடும், தமிழக பாஜக நிர்வாகிகளோடும் கலந்து ஆலோசிக்கப்பட்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படும் பெயர் பட்டியலைக் கொண்டு எஸ்பிஜி பட்டியல் தயாரிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த பட்டியலில் இருப்பவர்கள் திடீர் காரணங்களால் வர முடியாமல் போகலாமே தவிர, இந்த பட்டியலில் இல்லாதவர்கள் புதிதாக வர முடியாது.

அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் பிரதமர்  வரும்போதும், இரவு விமான நிலையத்தில் இருந்து செல்லும்போதும் அவரை வரவேற்கும், வழியனுப்பும் பட்டியலில்தான் எடப்பாடியும், பன்னீரும் இடம்பெற்றிருந்தனர்.  மற்றபடி பிரதமர் விமான நிலையத்தில் அரசியல் புள்ளிகள் யாரையும் சந்திப்பதாக எந்த நிகழ்ச்சியும் இடம்பெறவில்லை. 

எஸ்பிஜி அனுப்பிய பட்டியலில் விமான முனையத்தில் பிரதமருடன் யார் யார் நடக்க வேண்டும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் துவக்க விழாவில் அவருடன் யார் யார் இருக்க வேண்டும்,  விவேகானந்தா இல்லத்தில் அவருடன் யார் யார் மேடையேற வேண்டும்,  அவர் விவேகானந்தர் அறையில் பத்து நிமிடம் தியானம் செய்யும்போது அவருடன் இருக்க வேண்டிய ராமகிருஷ்ணா மட புள்ளிகள் யார் யார் என்பது உள்ளிட்ட அத்தனை விவரங்களும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில்தான் பல்லாவரம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மீண்டும் ஏர்போர்ட் திரும்பிய மோடி, அங்கிருந்து விமான நிலையம் சென்று  விமானத்தில் மைசூர் புறப்பட்டுவிட்டார்.

விமான நிலையத்தில் தங்களை சந்திப்பார் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒரு மணி நேரமாக விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர்களால் மோடியை தனியாக சந்திக்க இயலவில்லை.

விமான நிலையத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியே ஏற்பாடு செய்யப்படாத நிலையில்  மாலையிலேயே சென்றதில் இருந்து என்ன தெரிகிறது என்றால்… பாஜக டெல்லி தலைவர்களுடனோ, பிரதமருக்கு நெருக்கமானவர்களுடனோ எடப்பாடிக்கும் பன்னீருக்கும் சரியான தகவல் தொடர்பே இல்லை என்பதுதான். அப்படி ஒரு நிகழ்ச்சியே இல்லை என்று தெரியாமல் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருந்தார்களா அல்லது தெரிந்தும் மோடி அழைப்பார் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார்களா என்பது அவர்களுக்குதான் வெளிச்சம் என்கிறார்கள் பாஜகவினர்.

அதிமுக தரப்பில் விசாரித்தால் இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியல் சந்திப்புகளை மோடி தவிர்த்திருக்கிறார். விரைவில் எடப்பாடி  டெல்லி செல்வார் என்கிறார்கள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ‘நேர சூழல் காரணமாகத்தான் எடப்பாடி மோடி சந்திப்பு நடக்கவில்லை. மோடியை எங்கு சந்திக்க வேண்டுமோ அங்கே எடப்பாடி சந்திப்பார்’ என்கிறார்.

அதிமுகவினரோ முதுமலை சென்று யானைகள், காட்டெருமை, புலிகள், மான்களுகெல்லாம்  ஒரு மணி நேரம் ஒதுக்கிய மோடி, எடப்பாடி, பன்னீருக்கு ஒரு பத்து நிமிடம் கூட ஒதுக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

பிற மாநில மொழிகளில் சிஆர்பிஎஃப் தேர்வு: அமித்ஷாவிற்கு முதல்வர் கடிதம்!

சென்னை – கோவை வந்தே பாரத்: ஜாலி ட்ரிப் போலாமா?

+1
0
+1
4
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *