விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது பற்றி அமைச்சர் பொன்முடி விளக்கமளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு பலர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி இதுவரை 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்தார். அதனை இன்று (மே 16) அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இருவரும் நேரில் சென்று வழங்கினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, `உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறோம். நேற்று பேட்டிக் கொடுத்தவர்கள் எல்லாம் என்னவோ, அந்த காலத்தில் இதுபோன்று நடக்காதது போல பேசுகிறார்கள்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் திண்டிவனம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மது அருந்தி உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் திமுக ஆட்சியில் மட்டும் தான் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பது போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த கட்சிக்காரராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். இதில் அதிமுக காரர்களும் இருக்கிறார்கள்` என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், குடித்துவிட்டு செத்தவர்களுக்கு ஏன் ரூ.10 லட்சம் கொடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது குடித்தவர்களுக்காகக் கொடுக்கவில்லை. அவர்களது குடும்பம் எல்லாம் ஏழைக் குடும்பமாக இருக்கிறது. மீனவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் குடும்பமாக இருக்கிறது. அந்த அடிப்படையில் தான் 10 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இதை அரசியலாக்க வேண்டுமென்ற எண்ணம் கிடையாது` எனத் தெரிவித்தார்.
பிரியா
இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்: தமிழகத்திற்கு எச்சரிக்கை!
தி கேரளா ஸ்டோரி… தமிழ்நாட்டில் தடையா?: உச்சநீதிமன்றத்தில் அரசு பதில்!