வைஃபை ஆன் செய்ததும் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததும், அதை ஆளுநர் ஏற்றுக் கொண்ட செய்தியும் ஃப்ளாஷ் நியூஸாக இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“2023 ஜூன் 13 ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை, அன்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி… முழுதாக 8 மாதங்கள் கழித்து 2023 பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இன்று (பிப்ரவரி 13) ஆம் தேதி செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதம் முதல்வரால் ஏற்கப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநரும் அதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை ஜூன் 16 ஆம் தேதி இலாகா இல்லாத அமைச்சராக ஆளுநருக்கு பரிந்துரை செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதை ஏற்காத ஆளுநர் சரியான காரணங்கள் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி, ஆளுநர் அந்த பரிந்துரையை நிராகரித்து, கடிதத்தை திருப்பி அனுப்பினார். ஆனால் சில மணி நேரங்களிலேயே தனது கடிதத்தை நிறுத்தி வைத்த ஆளுநர், ‘உள்துறை அமைச்சகம், சட்ட வல்லுநர்களின் அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் இதுகுறித்து தனது நிலையை தெரிவிப்பதாக கூறினார். ஆனால் அதன் பின் அவர் எந்த நிலையும் எடுக்கவில்லை.
இவ்வாறு இலாகா இல்லாத அமைச்சராக சுமார் எட்டு மாதங்கள் நீடித்தார் செந்தில்பாலாஜி. அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இதுவரை மூன்று முறை ஜாமீன் கேட்டு மனு செய்தார். அத்தனை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்தார். அது தள்ளுபடியான நிலையில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றார். உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் செந்தில்பாலாஜி. அந்த ஜாமீன் மனு மீது கடந்த ஜனவரி 30 ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “அரசில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் ஒருவர் கிரிமினல் வழக்கில் கைது செய்யப்பட்டால் கூட அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
ஆனால் மோசடி குற்ற வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 230 நாட்களாக சிறையில் இருக்கும் நிலையிலும் அவர் அமைச்சராக தொடர்வதை எப்படி அனுமதிக்க முடியும்?” என்று கேள்வி கேட்டார். மேலும் அமலாக்கத்துறை பதில் தருமாறு வழக்கை பிப்ரவரி 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
மேலும் இதுவரையிலான செந்தில்பாலாஜி தாக்கல் செய்த அனைத்து ஜாமீன் மனுக்களிலும், ‘அவர் சிறையில் இருக்கும் போதே அமைச்சர் அந்தஸ்தோடு இருக்கிறார். ஜாமீனில் விட்டால் தனது அரசியல் அதிகாரத்தை வைத்து சாட்சிகளை நீர்த்துப் போகச் செய்வார். மேலும் தேடப்படும் நபராக இருக்கிற அவரது தம்பியும் இன்னும் தலை மறைவாகவே இருக்கும் நிலையில் செந்தில்பாலாஜியை ஜாமீனில் விட முடியாது” என்ற பதிலையே திரும்பத் திரும்ப அமலாக்கத்துறை சொல்லி வந்திருக்கிறது.
இந்த நிலையில்… அமலாக்கத்துறையின் ஜாமீன் மறுப்பு வாதங்கள், நீதிபதி ஆனந்த வெங்கடேஷின் கருத்து ஆகியவற்றை மேற்கோள் காட்டி முதல்வர் ஸ்டாலினுக்கு இவ்வழக்கை கவனிக்கும் வழக்கறிஞர்கள் ஒரு தகவலை அனுப்பினார்கள்.
அதாவது, ‘செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் வரையில் அவருக்கான ஜாமீனுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. வரும் 14 ஆம் தேதி செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அவர் அமைச்சராக இல்லாமல் இருந்தால் சட்ட ரீதியான சாதகமாக வாய்ப்பு அதிகமுள்ளது’ என்பதுதான் அந்த ரிப்போர்ட்.
முதல்வர் ஸ்பெயினில் இருந்து திரும்பிய நிலையில் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், டிஐஜி முருகேசன் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புழல் சிறையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.
அப்போது, ‘நீங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் உங்களுக்கு பெயில் கிடைத்துவிடும் என்பதுதான் சட்ட ரீதியான நிலையாக இருக்கிறது. அதனால் நீங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை முதலமைச்சர் விரும்புகிறார்’ என்று செந்தில்பாலாஜியிடம் தெரிவித்துள்ளனர்.
முதலில் செந்தில்பாலாஜி இதற்கு சம்மதிக்கவில்லை. ஸ்டாலின் தன்னை கைவிட்டுவிட்டார் என்ற பேச்சுக்கே இது வழி வகுக்கும் என்று அவர் கருதியிருக்கிறார். ஆனால் சட்ட ரீதியான நிலையை விளக்கிய பிறகே செந்தில்பாலாஜி சம்மதித்திருக்கிறார்.
அதன்படி தயார் செய்யப்பட்ட ராஜினாமா கடிதத்தில் புழல் சிறையில் இருந்தபடி நேற்று மாலை 5 மணிக்கு செந்தில்பாலாஜி கையெழுத்திட்டிருக்கிறார்.
அந்தக் கடிதம் நேற்று இரவே முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்கு தனது இல்லத்தில் செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதம் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர், அப்போது ஆளுநர் இதை உடனடியாக ஏற்றுக் கொள்வாரா என்ற கேள்வியும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
காலையில்தான் சட்டமன்றத்தில் தன்னை சபாநாயகர் அவதூறாக பேசியதாக ஆளுநர் அறிக்கையே வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடித்தை ஏற்பதற்கு தாமதப்படுத்துவாரா? பிப்ரவரி 14 ஆம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு முன் ராஜினாவை ஏற்று ஒப்புதல் அளிப்பாரா என்றும் ஆலோசிக்கப்பட்டது.
அதன் பிறகு உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதம் அனுப்பப்பட்டது.
முதலமைச்சரே எதிர்பாராத வகையில் உடனடியாக செந்தில்பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஏற்று ஆளுநரும் உடனடியாக ஒப்புதல் அளித்தார்.
ஏனென்றால் செந்தில்பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இரு மாதங்களுக்குள் தமிழ்நாடு மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை மேற்கோள் காட்டி செந்தில்பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்தபோதே… அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு 2023 மே மாதமே கடிதம் எழுதினார். அதை முதன் முதலில் மின்னம்பலத்தில் வெளியிட்டோம்.
இந்த பின்னணியில் செந்தில்பாலாஜியின் ராஜினாமாவுக்கு தான் கொடுத்த அரசியல் அழுத்தமும் ஒரு காரணம் என்று கருதுகிறார் ஆளுநர். அதனால் நேற்று இரவு முதல்வர் பரிந்துரைத்த நிலையில் இன்று காலை ஏற்றுக் கொண்டுவிட்டார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அப்போது செந்தில்பாலாஜி ராஜினாமா செய்ததன் மூலம், ‘அவரை ஜாமீனில் விடுதலை செய்தால் அமைச்சர் என்ற அதிகாரத்தின் மூலம் வழக்கை குலைக்க முயற்சிப்பார்’ என்று அமலாக்கத்துறையால் காரணம் சொல்ல முடியாது. அதனால் பெயில் கிடைத்துவிடும் என்று நம்புகிறது திமுக தரப்பு.
தேர்தல் நேரமாக இருப்பதால் செந்தில்பாலாஜியின் கள அரசியல் கண்டிப்பாக தேவை என்று கருதுகிறார். அவர் ஜாமீனில் வெளிவந்தால் கொங்கு பகுதியை செந்தில்பாலாஜியிடம் மீண்டும் கொடுப்பதற்கும் முதலமைச்சர் தயாராகிவிட்டார் என்றும் சொல்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆளுநர்கள் vs முதலமைச்சர்கள் : ஆளுநரின் அதிகாரம் என்ன? சட்டம் என்ன சொல்கிறது?
”தெறி அப்டேட்” நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற ‘கங்குவா’